1967 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டது பற்றி விளக்கம் அளித்தபோது, “நான் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்டேன். ஆனால் திராவிட நாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அவற்றில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை” என்று கூறினார்.அண்ணா அவர்கள் மறைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு 21.07.1968 அன்று சிலம்பு செல்வர் ம.பொ.சி அவர்கள் நடத்திய மாநில சுயாட்சி கருத்தரங்கில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் தலைவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் போன்றோரும் பங்கேற்றனர்.இதில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள்,மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில்; மத்திய அரசு பலமாக இருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில்; ஆனால் இன்று அந்த சாம்ராஜ்யங்கள் எங்கே? சரிந்த சாம்ராஜ்யங்களோடு இப்போது இருக்கின்ற சாம்ராஜ்யத்தை ஒப்பிடுவதற்கு உள்ளபடியே வருந்துகிறேன். அந்த சாம்ராஜ்யவாதிகள் அதிகமான வலிவு தேட முயற்சி செய்த ஒவ்வொரு நேரத்திலும் சரிவு தான்.
ஒளரங்கசீப் காலத்தில் இருந்த வலுவான மத்திய ஆட்சிக்கு ஒப்பான ஆட்சியை சரித்திரத்தில் காண முடியாது. ஆனால் அந்த சாம்ராஜ்யம் என்ன ஆயிற்று என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.மத்திய அரசின் வலிவு என்பது மாநிலங்களின் ஒவ்வொன்றின் தனித்தனி வலிமையையும் கூட்டியதால் ஏற்பட்ட மொத்த வலிவுதான் என்றால் வாதத்திற்கு ஏற்றது. அரசியலுக்கு நல்லது. காலத்துக்கு உகந்தது. ஆனால் மத்திய அரசுதான் எல்லா உரிமைகளையும், பலத்தையும் வைத்திருக்கும் மாநிலங்கள் தத்தித் தத்தி நடக்கும் அதிகாரங்கள்தான் வைத்திருக்கும் என்றால், அது எதற்கும் பொருத்தம் உடையது அல்ல.மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்துக் கொள்வதால் மாநிலங்கள் பலவீனம் அடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கு என்று புதிய வலிவு எதுவும் ஏற்பட்டு விடாது. மேல் அதிகாரம் அனைத்தும் டெல்லியில் இருப்பதை மாற்றிடத்தான் மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்திருக்கிறது.
மாநில சுயாட்சி என்பது தேவையின் அடிப்படையில் எழுந்த அரசியல் கோரிக்கைகளே தவிர அரசியல் கட்சிக் கோரிக்கை அல்ல” என்று மாநில சுயாட்சிக் கோட்பாடு பற்றி தெளிவுபட எடுத்துரைத்தார் அண்ணா.பேரறிஞர் அண்ணாவின் உயில்’ என்று கருதப்படும் மாநில சுயாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு அண்ணாவின் மறைவுக்கு பின்னர், முதல்வர் பொறுப்பை ஏற்ற அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் முனைந்தார்.தலைமை நீதிபதியாக இருந்த டாக்டர் இராஜமன்னார் அவர்கள் தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதி பி.சந்திரா ரெட்டி மற்றும் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு மத்திய, மாநில உறவு குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை 22.09.1969 இல் அமைத்தார்.
இராஜமன்னார் குழு ஓராண்டு காலத்திற்கு மேல் ஆய்வுகளை மேற்கொண்டு 10.04.1971 அன்று தனது பரிந்துரை அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையை ஒன்றிய அரசின் பார்வைக்கு முதல்வர் கலைஞர் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் 22.06.1971 இல் முதல்வர் கலைஞருக்கு எழுதிய கடிதத்தில், இராஜமன்னார் குழு பரிந்துரை குறித்து தமிழ்நாடு அரசின் கருத்தினை தெரியப்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.அதன் பின்னர்தான் ஏப்ரல் 16, 1974 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்புமிக்க மாநில சுயாட்சித் தீர்மானத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் முன்மொழிந்தார்கள்.தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.ஏப்ரல் 20, 1974 இல் முதல்வர் கலைஞர் அவர்கள் பதிலுரை வழங்கும்போது,மாநில சுய ஆட்சியின் தேவை குறித்து விளக்கம் அளித்து நீண்ட நேரம் உரையாற்றினார். அதன் பின்னர் மாநில சுயாட்சித் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது.
சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் அவர்களால் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரை நூற்றாண்டுகாலம் ஆகிறது. ஐம்பது ஆண்டு காலத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திராவிட மாடல் அரசின் முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் திரு. குரியன் ஜோசப் அவர்களை தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதன் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான திரு. அசோக் வர்தன் ஷெட்டி அவர்களும், தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் மேனாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் அவர்களும் இருப்பார்கள்” என்று அறிவித்திருக்கிறார்.
பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் உயிர் மூச்சாக இருந்த மாநில சுயாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் தருவதற்கு குழு அமைத்திருக்கிற முதல்வரின் அறிவிப்பு வரவேற்க தகுந்தது. வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது ஆகும்.இந்திய நாட்டிற்கு, சமூக நீதிக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக தமிழ்நாடுதான் திகழ்கிறது. மாநில சுயாட்சி முழக்கமும் தமிழ்நாட்டிலிருந்துதான் முதன் முதலில் எழுந்தது.50 ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் கலைஞர் அவர்கள் மாநில சுயாட்சித் தீர்மானம் மீது சட்டமன்றத்தில் பேசுகையில் “நான் முன்மொழிந்த தீர்மானத்தை பலர் இங்கு வழி மொழிந்திருக்கிறார்கள். சிலர் என் மீதும், ஆளும் கட்சியின் மீதும் பழி மொழிந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.மாநில சுயாட்சி பற்றி ஆராயக் குழு அமைக்கப்பட்ட உடன் இன்றைக்கும் பாஜக, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் மீது பழி மொழிந்திருக்கிறது. அண்ணாவின் பெயரால் அமைந்திருக்கிற அதிமுக, பாஜகவை வழி மொழிந்திருக்கிறது.இதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு மாநில உரிமைகளுக்கு ஓங்கி முழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிகள் வெற்றியடையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.