போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசையும், கோவை மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி 2021 தேர்தல் வாக்குறுதியின்படி, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த முறையை ரத்து செய்து மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்யும் வரை அரசாணை 62 ன் படியும் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படியும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மேலும், தொழிலாளர்களிடம் மாதா மாதம் பிடித்தம் செய்யப்படும் PF, ESI உள்ளடங்கிய சம்பள ரசீதை வழங்க வேண்டும். ESI மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும்.
விடுப்பு நாட்களில் பணிக்கு வந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். கோவை மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் பணி சுமையால் உயிரிழப்பு ஏற்பட்டால் ஈம சடங்குக்கு காரியங்களுக்கு ரூபாய் 30,000 வழங்க வேண்டும். பனி சுமையால் ஏற்படுகின்ற உயிரிழப்பை விபத்தாக கருதி அவர்களுக்கு விபத்து காப்பீடு தொகையை நல வாரியம் மூலம் பெற்றுக் கொடுக்க வேண்டும். சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் தூய்மை பணியாளர்களை மதியம் 12 மணிக்கு மேல் வேலை வாங்கக் கூடாது என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கோஷமிட்டனர்.இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், போராட்டம் காரணமாக மாநகராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடந்தன. போராட்டம் காரணமாக மாநகராட்சி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.