கோவை:தி.மு.க அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு !!!

sen reporter
0

சேவை மையம் தன்னார்வ அமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் 'நலம்' - இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகளிர் நல மருத்துவம், கண் நலம் மற்றும் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆகிய மருத்துவ பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர்களால் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


இம்முகாமில் புலியகுளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர்.இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், 'கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்து குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலனுக்காக வாரந்தோறும் நலம் என்கிற பெயரில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் முகாமில் பி எஸ் ஜி மருத்துவமனை, உலக மலையாளிகள் அமைப்பு ஆகியோர் இணைந்து கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும மற்றும் உடல் கோளாறுகள் குறித்த சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் முதல்வர் சட்டமன்றத்தில் பேசும் போது பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் உள்ளதாக மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பேசினார். சமீபத்தில் ஈரோட்டில் முதியவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். முன்னதாக திருப்பூரிலும் இதே போல் சம்பவம் நடைபெற்றது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் முதியவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கான செயலாக்கத் திட்டங்கள் இல்லாததால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் இதைப் பற்றி கவலைப்படாத தி.மு.க, முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தி தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு வருகின்றனர்.இந்த மருத்துவ முகாம் நடைபெறும் இந்த அரசு மகளிர் கல்லூரி எப்போது புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது என்பது சட்டமன்ற உறுப்பினரான எனக்கே தெரியாது. 9 லட்சத்திற்கும் மேல் நிதி செலவு செய்யப்பட்டு வாங்கிய புதிய இருக்கைகள் மாணவர்கள் பயன்படுத்த முடியாமல் அறையில் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று உயர் கல்வி துறையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஆனால் தி.மு.க அரசு முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தி வருகிறது.


 இவை அனைத்தும் பொது மக்களின் தொடர்பில் இருந்து முதல்வர் வெகு தூரம் தூரத்தில் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.மத பயங்கரவாத வன்முறைகளுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் ஒன்று திரண்டு கருத்து தெரிவித்து பயங்கரவாதத்திற்கு எதிரான மோடியின் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் பா.ஜ.க சார்பில் பகல்காம் தாக்குதலுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகிறது. கோவையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கோவை மத பயங்கரவாதிகளின் தாக்குதலால் காவலர் செல்வகுமார், வீர கணேஷ், சசிகுமார் என மத பயங்கரவாதத்திற்காக பலரையும் பலி கொடுத்த இயக்கமாகும்.பயங்கரவாதம் தமிழகத்தில் இல்லை என முதல்வர் சட்டப் பேரவையில் கூறுகிறார். அதற்கு தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பை நான் படித்துக் காட்டினேன். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழகத்தில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஆல்கொய்தா இயக்கங்களோடு தொடர்பில் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளதை நான் சுட்டிக் காட்டினேன். தமிழகத்தில் மத பயங்கரவாதம் இல்லை ஆனால் கோவையில் கார் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டு நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது.இளைஞர்களை மூளைச்சலவை செய்து மத பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட வைக்கின்றனர் .சில அரசியல் கட்சி தலைவர்களும் இதை ஆதரிக்கின்றனர். அரசியலுக்காக சிறுபான்மையினருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு மத பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது வேறு என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வன்முறைக்கு ஆதரவாக செயல்படாமல் மத பயங்கரவாத வன்முறைகளுக்கு எதிராக பிரதமர் மோடி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தமிழக அரசு துணை இருக்க வேண்டும். அதுவே இந்த மக்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பு ஆகும்.


கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயிகளுக்கு தேவையான நீர் மற்றும் அவர்களுக்கான மானியத்தை வழங்கி தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். சென்னையில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் ப்ளீச்சிங் பவுடரின் தரத்தை மக்களே எளிதாக அறிந்து கொள்ள முடியும். இது போன்ற புகார்களை பொதுமக்கள் சொல்லும் போது புகார் அளிக்கும் நபர்கள் மீது மக்கள் பிரதிநிதிகள் ஏளனமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மத்திய அரசின் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை ஆகிய புலனாய்வு அமைப்புகள் செயல்பாடு குறித்து ம.தி.மு.க தலைவர் வைகோ கூறிய கருத்திற்கு, இந்த புலனாய்வு அமைப்புகளால் அவரும் பாதிக்கப்பட்டவர் தான் அரசியல் ஆதாயத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவருக்கே தெரியும். மக்களை ஏமாற்றி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர்கள் மீது கடந்த 12 ஆண்டுகளில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மக்கள் பணம் மீண்டும் மக்களிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதைப்பற்றி அவர் ஏன் பேச மறுக்கிறார்.


தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் உறுப்பினர் அரசியலில் இருப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்த கருத்திற்கு பதில் அளித்தவர், பெண்கள் மற்ற துறைகளில் செல்ல விரும்பினால் ஆதரவு தெரிவிக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் குடும்பங்கள் அரசியலுக்கு செல்லும் போது ஆதரவு கொடுப்பதில்லை. இருந்தும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் மக்கள் பணி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள் அதற்கான அந்த வாய்ப்புகளை வழங்கக் கூடிய உரிய அங்கீகாரத்தை வழங்கக் கூடிய கட்சி எது என தெரிந்து கொண்டு சேர வேண்டும். அப்படிப்பட்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. அவர் மக்கள் பணி செய்ய பா.ஜ.க வில் இணைந்து செயலாற்றலாம் என அழைப்பு விடுத்தார்.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்தில் தி.மு.க அரசு நீட் குறித்து பொய்யான பிரச்சாரங்களை பரப்பிய போதும் ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் தேர்ச்சி பெறுபவரின் எண்ணிக்கையும் அதிகரித்து தான் வருகிறது. நீட் தேர்வினை மக்களும் மாணவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். இன்றைக்கு ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறுவதற்கும், மருத்துவ படிப்பு மேற்கொள்வதற்கும் நீட் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.சட்டப்பேரவையில் தி.மு.க அரசுக்கு எதிராக நான் பேசிய வீடியோக்களை வழங்கவில்லை என்றாலும், எனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களின் நலனுக்காக நான் பேசிய கருத்துக்களை வழங்கினால் தான் அதை மக்களிடம் நான் காட்ட முடியும் . அதைக் கூட இந்த அரசு செய்யவில்லை. பத்திரிக்கை சுதந்திர நாளில் வாழ்த்து தெரிவித்த முதல்வர், தமிழகத்தில் தி.மு.க அரசுக்கு எதிராக யாரும் கருத்து தெரிவித்தாலும் அவர்கள் மீது குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்துவது, அவர்களது வீட்டில் சாக்கடையை கொட்டுவது என்கிற செயலை செய்கிறது. சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி குறித்தும் உள்துறை அமைச்சர் குறித்தும் இந்திய ராணுவம் குறித்தும் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க புகார் அளித்தாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை' என தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top