தூத்துக்குடி 443வது தூய பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன்தலைமையில்நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (18.07.2025), 443வது தூய பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது : தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 443வது திருவிழா இந்த ஆண்டு 25.07.2025 முதல் 06.08.2025 வரையில் நடைபெறவுள்ளது. 25.07.2025 அன்று கொடி பவனியும், 26.07.2025 அன்று கொடியேற்ற விழாவும், 03.08.2025 அன்று நற்கருணை பவனி மற்றும் நற்கருணை ஆசீர், 04.08.2025 அன்று மாதா கோவிலை சுற்றி மாதா சப்பர பவனியும், 05.08.2025 அன்று நகர வீதிகளில் மாதா சப்பர பவனி மற்றும் 06.08.2025 அன்று கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது. திருவிழா நாட்களான 26.07.2025 முதல் 05.08.2025 வரையிலான நாட்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். இவ்விழாவிற்காக தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் (Traffic Diversion), வாகன நிறுத்தங்கள் (Parking Slot), மற்றும் போக்குவரத்து ஒழுங்கு (Traffic Regulation) சம்மந்தமாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவ்விழாவில் சுகாதாரத்துறை சார்பாக திருவிழா காலங்களில் தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தூத்துக்குடி நகர் பகுதியில் சேரும் குப்பை கூளங்களை அவ்வப்போது அகற்றிடும்படி தூத்துக்குடி மாநகராட்சியினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை இல்லாமல் இருக்க மாதா கோவில் வளாகங்களில் கொசு மருந்து தெளிக்க மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்கவும், கோயில் வளாகத்தில் திருவிழா காலங்கள் முழுவதும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடன், அவசர மருத்துவ சிகிச்சை பெறும் வசதியுடனும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்திடவும், திருவிழா தினங்களில் தட்டுபாடின்றி குடி தண்ணீர் கிடைத்திட தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்யவும், தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக திருவிழா காலங்களுக்கு முன்பாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளை சரி செய்தல், மாதா கோவில் பகுதிகளில் தற்காலிக கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றிட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.காவல்துறை சார்பாக திருவிழா காலங்கள் முழுவதும் போதிய பாதுகாப்பு வழங்கிடவும், மாதா கோவில் பகுதிகளில் தற்காலிக கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றிட போதிய பாதுகாப்பு வழங்கிடவும், போக்குவரத்து காவல் பிரிவு சார்பாக திருவிழா காலங்களில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தல் மற்றும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடும் அமைத்தல் தொடர்பாகவும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பாக திருவிழா காலங்களில் தீயணைப்பு ஊர்தி முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்டும், 108 ஆம்புலன் ஊர்தியும் எந்த நேரமும் தயார் நிலையில் வைத்திருக்கவும், போக்குவரத்து துறை சார்பாக திருவிழா காலங்களில் ஏற்கனவே இயங்கும் நகர பேருந்துகளுடன் கூடுதலாக 40 பேருந்துகள் இயக்குவது குறித்துநடவடிக்கைஎடுக்கவும்,தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக திருவிழா நாட்களில் தங்கு தடையின்றி மின்சார வசதி வழங்கிடவும், கோவில் நிர்வாகத்துடன் இணைந்து சப்பரப்பணியில் ஈடுபடுவது குறித்தும், உணவு பாதுகாப்புத்துறை சார்பாக திருவிழா நாட்களில் ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டி நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரத்தினை சரிபார்த்து, கண்காணித்திடவும், ஆய்வு செய்திடவும், நெடுஞ்சாலைத்துறை சார்பாக திருவிழா காலங்களுக்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பழுதடைந்துள்ள சாலைகளை பழுது பார்த்து சரிசெய்திடவும்,
இருசக்கர வாகனம் நிறுத்துமிடங்களாக வடக்கு பீச் ரோட்டில் விஓசி துறைமுறை சமுதாய கூடம் (அருகில் எஸ்பிஐ), ஜார்ஜ் சாலையில் உப்பு அலுவலக வளாகம், டாசல் பள்ளியிலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடங்களாக வடக்கு பீச் ரோட்டில் முத்துநகர் பீச் நிறுத்தத்திலும், கால்டுவெல் பள்ளி மைதானத்திலும், தெற்கு பீச் ரோட்டில் மீனவர் துறைமுகம், ரோச் பூங்கா பகுதியிலும், ஜார்ஜ் ரோடு பகுதியில் தருவை மைதானத்திலும், காரபேட்டை ஆண்கள் பள்ளி பகுதியிலும், ஜிசி ரோடு பகுதியில் சின்ன கோவில் வளாகத்திலும், புனித சேவியர் பள்ளி (இரயில்வே நிலையம் எதிரில்) அமைக்கப்பட்டுள்ளது. தூய பனிமய மாதா பேராலய திருவிழாவினை அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் ஒருங்கிணைந்து நடத்திட வேண்டுமென அமைச்சர் பி.கீதாஜீவன்தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் இ.இரவிச்சந்திரன், உதவி காவல் கண்காணிப்பாளர் மதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், தூய பனிமய மாதா பேராலய அருட்தந்தை ஸ்டார்வின், விழா கமிட்டியாளர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.