அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச் செயலாளராக செயல்பட்டு வருபவர் முருகன். அல்லிநகரத்தில் வசித்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேனி புதிய பேருந்து நிலையம் செல்லும் பைபாஸ் சாலை அருகே புதிய வீடு ஒன்றை கட்டி, அதற்கு இல்ல விழாவையும் நடத்தியுள்ளார்.
இந்நிலையில், அந்த புதிய வீட்டின் காவலாளி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, வீட்டின் முன்பாக பிளாஸ்டிக் கவரில் சந்தேகப்படும்படியான பொருள் ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக முருகனிடம் இதுபற்றி காவலாளி தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், தனது ஆதரவாளர்களுடன் விரைந்து வந்த முருகன், அந்த பொருளை சோதித்துப் பார்த்துள்ளார். அப்போது, அந்தக் கவரில் 5 நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகன், இதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் அங்கு போலீசாருடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள், நாட்டு வெடிகுண்டுகளை ஆய்வுக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். அரசியல் கட்சி பிரமுகரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், “தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆகையால், தனது வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டுகளை வைத்த நபர்களை விரைவாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
