அமெரிக்காவின் 50% வரி விதிப்பால், ரூ.23,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுகள் முக்கியமானவை. கடந்த 2023- 2024-ம் ஆண்டில் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரூ.60,523 கோடி மதிப்பில், 17,81,602 டன் அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறால், மீன், கணவாய், நண்டு உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டன.இதில், அமெரிக்காவுக்கு மட்டும் ரூ.23,000 கோடி மதிப்பிலான 3,29,192 டன் (மொத்த ஏற்றுமதியில் 40%) கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த 2010-ம் ஆண்டு வரை ரூ.4,500 கோடி என்ற அளவில் இருந்த கடல் உணவு ஏற்றுமதி தற்போது ரூ.63,000 கோடி வரை உயர்ந்துள்ளது. அதற்கு முதன்மையான காரணம், இந்தியாவின் கடல் உணவுக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பு.தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு மட்டும் கடந்த 2023-2024-ம் ஆண்டில் ரூ.3,214 கோடி மதிப்பிலான 73,822 டன் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதில் அதிக அளவில் இறால்கள் ஏற்றுமதி செய்யபட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இருந்து சுமார் 25 நிறுவனங்களில் இருந்து அமெரிக்காவுக்கு கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதில் 15 நிறுவனங்கள் தூத்துக்குடியில் இயங்கி வருகின்றன. மாதம் 20 கன்டெய்னர்களில் அமெரிக்காவுக்கு இறால் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும்இந்தியப்பொருட்களுக்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்ததால் கடல் உணவு ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கடல் உணவுகள் ஏற்றுமதியாளர் சங்கத்தின் மாநில தலைவர் செல்வின் பிரபு தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறுகையில், “இந்திய கடல் உணவு ஏற்றுமதி சுமார் ரூ.23 ஆயிரம் கோடி வரை பாதிக்கப்படும். இந்த தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் ஏற்றுமதியாளர்கள், இறால் பண்ணை உரிமையாளர்கள், மீன் மற்றும் இறால் பதப்படுத்தும் ஆலைகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள்பாதிக்கப்படுவார்கள்.ஏற்கனவே எங்களுக்கு ஆர்டர் கொடுத்திருந்த நிறுவனங்கள் கூட தற்போது ஆர்டர்களை ரத்து செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆலைகள் உற்பத்தியை நிறுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல தற்போது அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ.63 கோடி மதிப்பிலான 500 டன் கடல் உணவுகள் திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய செல்வின் பிரபு, அமெரிக்கா இந்தியாவை தவிர்த்து விட்டு, ஈக்வடார், இந்தோனேசியா போன்ற நாடுகளிடம் இருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்யத் தொடங்கியிருக்கிறது. இதனால் இந்தியாவிற்கு மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா இவ்வாறு 50 சதவீதம் வரி விதித்தால் இதை நம்பியுள்ள நாங்கள் என்ன செய்வது? என்று தெரியவில்லை. இது எங்களுக்கு பேரடியாக உள்ளது என்று வேதனையுடன் கூறினார்.மேலும், முன்பு இறாலுக்கு வரி 8.5 சதவீதம் இருந்தது, தற்போது அது 58.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கணவா, நண்டு, ஆக்டோபஸ் போன்ற கடல் உணவுகளுக்கு இதுவரை வரி இல்லாமல் இருந்தது. அது தற்போது 50 சதவீதமாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி தடைபடுவதால் வரும் பாதிப்பை இந்தியாவால் ஈடுகட்ட முடியாது. அதனால், கடல் உணவுகளை பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இது குறித்து இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். வங்கிகளிடம் பேசி வட்டியை குறைக்க வேண்டும். வெகு விரைவில் நல்ல செய்தியை அறிவிப்பார்கள்எனஎதிர்பார்க்கிறோம் என்று செல்வின் பிரபு கூறினார்.