சென்னை: வாக்கு திருட்டு விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய 7 கேள்விகள்!!

sen reporter
0

வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 கேள்விகளை எழுப்பியுள்ளார்.கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக, மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் சில சான்றுகளுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 17) செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “ராகுல் காந்தி அளித்த குற்றச்சாட்டு குறித்து ஆதாரம் கேட்டதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, அவரின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையமோ அல்லது வாக்காளரோ அஞ்சப்போவதில்லை” என தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு, இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அவர் 7 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

1.வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?

2.புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதை சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?

3. வாக்காளர் பதிவு விதிகள் (Registration of Electors Rules) 1960-இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர் வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?

4. பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும் போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளுமா?

5. மே 1, 2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு ஜூலை 17-ம் தேதி அன்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?

6. வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?

7. நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top