இருப்பினும் பணி ஓய்வுக்கு பிறகு வீட்டு வேலைகளை மட்டுமே செய்து வந்த இவருக்கு படிப்பின் மீது தீராத காதல் இருந்து வந்துள்ளது. அதன் விளைவாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சீனிவாசா சுப்புராயா அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். பாலிடெக்னிக் படிப்புகளுக்கு வயது வரம்பு இல்லை என்பதால் கல்லூரி நிர்வாகம் அவரது ஆர்வத்தைப் பாராட்டி, அவருக்குப் படிக்க வாய்ப்பளித்தது. இவர் தற்போது அங்கு இரண்டாம் ஆண்டு டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.வடலூரில் தனது மனைவியுடன் வசித்து வரும் இவர், அங்கிருந்து தினமும் 50 கிலோ மீட்டர் தூரம், பேருந்து, ரயில் என மாறி மாறி பயணித்து பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று வருகிறார். உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருக்கிற மனைவிக்கு தேவையான அனைத்தும் செய்து வைத்து விட்டு, மற்ற கல்லூரி மாணவர்களை போலவே தோளில் புத்தகப்பை, கையில் லஞ்ச் பேக் என சரியாக 9 மணிக்கு கல்லூரிக்கு வந்து விடுகிறார்.
இளம் மாணவர்களை போலவே சுறுசுறுப்பாக கல்லூரிக்கு வரும் செல்வமணியை பார்க்கிற மற்ற மாணவர்களும் உற்சாகத்துடன், ‘தாத்தா... தாத்தா!’ என்று அவரிடம் அன்பாக பேசுகின்றனர். அவரும் தனது அனுபவங்கள் குறித்தும், படிப்பு குறித்தும் மாணவர்களுடன் சகஜமாக பேசி பழகுகிறார். அதே போல் மாணவர்களும் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்வதாக கூறுகின்றனர். கல்லூரி முடிந்ததும் மாலை 5 மணிக்கெல்லாம் மீண்டும் அதே போல் வீட்டிற்குதிரும்புகிறார்.செல்வமணியின் படிப்பு ஆர்வம் குறித்து மாணவர் யஷ்வந்த் கூறுகையில், "தாத்தாவுக்கு இந்த வயதிலும் இவ்வளவு படிப்பு ஆர்வம் இருக்கும் போது, நாங்கள் ஏன் சோம்பேறித்தனமாக இருக்க வேண்டும்? அவர் எங்களுக்கு ஒரு உத்வேகம். எந்தவொரு சந்தேகத்தையும் அவர் எங்களிடம் தயங்காமல் கேட்டுத் தெரிந்து கொள்வார். அவரது விடாமுயற்சி எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ஒரு பெரிய முன்னுதாரணம்" என்று தெரிவித்தார்.கல்லூரிபேராசிரியர்களும் மற்ற மாணவர்களுக்கு செல்வமணி ஒரு சிறந்த ரோல் மாடலாக திகழ்வதாக பாராட்டினர். கல்லூரி முதல்வர் குமார் கூறுகையில், “பாலிடெக்னிக் படிப்புகளுக்கு வயது வரம்பு இல்லை என்பதால், நாங்கள் அவரைச் சேர்க்கத் தயங்கவில்லை. அவரது படிப்பு ஆர்வம், இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று உறுதியாக நம்புகிறோம். அவர் எங்கள் கல்லூரிக்கு கிடைத்திருக்கும் ஒரு பெருமை" என்று தெரிவித்தார்.தனிமை மற்றும் உடல் நல பிரச்சினைகளால் அவதியுற்று வருகிற முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற இந்த காலத்தில் செல்வமணி போன்றோர் ஓய்வு காலத்தைக் கூட தங்களுக்கு விருப்பமான வகையில் பயனுள்ளதாக்கி வாழ்க்கைக்கே அர்த்தம் சேர்க்கின்றனர். இவருடைய தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் சமூகத்தில் மற்ற அனைவருக்கும் ஓர் சிறந்த உதாரணம் என்பதில் சந்தேகமில்லை.
