சென்னை:தெரு நாய் பிரச்சனையை சமாளிக்க வெளிநாடுகளை பின்பற்றலாமே நீதிமன்றம் யோசனை!!!

sen reporter
0

ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களை பராமரிக்க தனி காப்பகங்கள் அமைக்க உள்ளதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.வெளிநாடுகளில் தெருநாய் பிரச்சனை எவ்வாறு கையாளப்படுகிறது? என்ன தீர்வு காணப்பட்டுள்ளது? என்பதை தெரிந்து கொண்டு, அதை நம் நாட்டில் பின்பற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம்யோசனைகூறியுள்ளது. நாட்டில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், சென்னையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் அழைத்துச் செல்லப்பட்ட ராட்வீலர் நாய்கள் கடித்து சிறுவர் - சிறுமியர், வயதானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இது போன்ற ஆக்ரோஷமான நாய்களை தடை செய்வது அல்லது முறைப்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட கோரி, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ் வேந்தன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தெரு நாய்களை பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி போட்டு, மீண்டும் அதே பகுதியில் விடுவதற்குப் பதிலாக அவற்றை தனி காப்பகங்கள் அமைத்து பராமரிப்பது தொடர்பாக, விரிவான திட்டத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தெரு நாய் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களின் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், தெரு நாய் விவகாரம் தீவிரமானது. தெருக்களில் பிடிக்கப்பட்டு, இனப்பெருக்க கட்டுப்பாடு செய்து அதே பகுதிகளில் விடும் பட்சத்தில், ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களை எங்கு பராமரிக்கப் போகிறீர்கள்? என அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு தனி காப்பகங்கள் அமைக்க உள்ளதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.அப்படியே காப்பகங்கள் அமைக்கப்பட்டால், அவற்றுக்கு உணவளிக்க யாருக்கு தைரியம் உள்ளது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது போன்ற நாய்களை கையாள வேறு நடவடிக்கைகளை எடுத்தால், மிருகவதை சட்டத்தைச் சுட்டிக் காட்டி, தொண்டு நிறுவனங்கள் வழக்குகள் தாக்கல் செய்யும். ஆகையால், வெளிநாடுகளில் தெருநாய் பிரச்சனை எவ்வாறு கையாளப்படுகிறது? என்ன தீர்வு காணப்பட்டுள்ளது? என்பதை தெரிந்து அதை நம் நாட்டில் பின்பற்றலாம் என ஆலோசனை தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top