முன்னதாக, ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஜெர்மனி நாட்டிற்கு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு ஜெர்மனி வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கொலோன் நகரில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு - ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர்சிறப்புரைஆற்றினார். மேலும், ஜெர்மனியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ரூ.3201 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் மூலமாக இந்தியா முழுவதும் தொழிலை விரிவுப்படுத்த BMW நிறுவனத்துக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அப்போது, தமிழ்நாட்டின் வலுவான EV (மின்னணு வாகனங்கள்) உள்கட்டமைப்பையும் இந்தியாவில் தங்களுடைய விற்பனை அனுபவத்தையும் மேற்கோள்காட்டி BMW நிறுவனம் தமிழ்நாட்டுடன் தொழில் செய்வதை மீண்டும் உறுதிப்படுத்தியது.இது குறித்து, மு.க.ஸ்டாலின் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் “தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்குத் துணை நிற்கும் ஐரோப்பியப் பயணம், தமிழ் உறவுகள் அளித்த அன்பும், ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்த பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன்” எனவும் பகிர்ந்துள்ளார்.
