தூத்துக்குடி:கோயிலுக்குள் நுழைய தடை ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை!!!
9/09/2025
0
கோயிலுக்குள்நுழையதடைவிதிக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய சமூக நீதி கட்சியினர் முற்றுகையிட்டனர்.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மத்தியமான் விளை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (45). இவர், மத்திய மான்விளை, ஆறுமுகப்புரம், புதூர், பள்ளத்தூர் ஆகிய ஊர்களுக்கு ஊர் வேலை செய்யும் பணியாளராகவும், பந்தல் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி கந்தசாமியின் மகன் கோயில் முன்புள்ள படிக்கட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த குருசாமி மகன் செல்வகுமார், அவரை கோயில் பக்கம் வரக் கூடாது என்று கூறியுள்ளார். இதையடுத்து, நடைபெற்ற ஊர் கூட்டத்தில், கந்தசாமி குடும்பத்தை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தேசிய சமூக நீதி கட்சி தலைவர் எம்.கே.வெங்கடேஷ் குமார் தலைமையில், வன்கொடுமை சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், தென் மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகளும், ஆணவ படுகொலைகளும் அரங்கேறும் இந்த சூழலில் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இது போன்ற செயல்களை தடுக்காமல் துணை போவதாக கூறியும், தமிழக அரசு குலத்தொழிலை கட்டாயம் செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்துவதை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.ஆட்சியர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பின் தேசியத் தலைவர் எம்.கே.வெங்கடேஷ் குமார், பொதுச் செயலர் மாதயன், பொருளாளர் பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
