பட்டினப்பாக்கம், ஓட்டேரி, புரசிவாக்கம், கண்ணகி நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி என பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக இன்று 600 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கப்பட்டது.குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது.சென்னையில் கடந்த சில மாதங்களாக அதிக எண்ணிக்கையிலான குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பெண்களிடம் நகைப் பறிப்பு, செல்போன் திருட்டு, இருசக்கர வாகனங்கள் திருட்டு என குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இரவு பகலாக காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், குற்ற சம்பவங்களை கண்டறிய சென்னையில் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சில முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாமல் இருப்பதால், குற்றம் செய்தவர்கள் மிக எளிதாக தப்பி விடுகிறார்கள். இது குற்றவாளிகளுக்கு பெரும் சாதகமாக மாறி, அவர்களைக் கண்டுபிடிப்பது காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் காவல்துறைக்கு உதவும் வகையில் சம்பவத்தின் மூன்றாம் கண்ணாக கருதப்படும் சிசிடிவி கேமராக்களை சென்னைமுழுவதும்பொருத்துவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகிறது.காவல்துறை ஒத்துழைப்புடன் தனியார் நிறுவனம் ஏற்பாட்டில் பட்டினப்பாக்கம், ஓட்டேரி, புரசிவாக்கம், கண்ணகி நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி என பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. அந்த வகையில் இன்று செம்மஞ்சேரி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட சுனாமி குடியிருப்பில் காவல்துறை, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் 600 சிசிடிவி கேமரா பொருத்தும் பணி துவங்கப்பட்டது. ஒரு மாதத்தில் இந்த பணி முழுமையாக முடிந்து இந்த பகுதி முழுமையாக கண்காணிப்பு வளையத்துக்குள் வந்து விடும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், “எங்கள் பகுதியில் கொலை, கொள்ளை இருசக்கர வாகன திருட்டு, மொபைல் போன் திருட்டு என பல குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதற்கெல்லாம் காவல் நிலையத்தில் நாங்கள் புகார் அளித்துள்ளோம். அதற்கு காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சிசிடிவி கேமரா இல்லததால் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுபவரை விரைந்து கண்டறிய முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போது கேமராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன. இனி அனைத்துக்கும் ஆதாரம் இருக்கும். சிறு குற்றங்களுக்கு நாங்களே அந்த பதிவை பார்த்து காவல்துறையிடன் ஆதரத்தை சமர்ப்பிப்போம். அதனால், அவர்களுக்கும் நேரம் மிச்சமாகும் என்றனர்.