இந்த உயர் மட்ட மேம்பாலத்திற்காக அவினாசி சாலையின் நடுவில் 305 கான்கிரீட்தூண்கள்அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையே உள்ள துாரம் 30 மீட்டர். ஆனால் கோயம்புத்தூர் விமான நிலைய சந்திப்பு, ஹோப் காலேஜ் சந்திப்பு, நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மட்டும் இந்த துாரம் 40 மீட்டராக உள்ளது. அந்த இடங்களில் பிரதான சாலையுடன் இணைப்பு சாலைகள் வருவதால், வாகனங்கள் எளிதாக செல்வதற்காக தூண்களுக்கு இடையிலான தூரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த பாலம் செக்மெண்டல் பாக்ஸ்
தொழில்நுட்பத்தில் கட்டப்படுகிறது. அதாவது ஓடுதளம் வெளியிடங்களில் தயார் செய்யப்பட்டு அந்த செக்மெண்டல் பாக்ஸ்களை கொண்டு வந்து ஒரு தூணுக்கும் மற்றொன்றுக்கும் இடையே லாஞ்சிங் கர்டர் வாயிலாக துாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் இரவில் தான் நடைபெற்றன. ஏனென்றால் பகலில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் நுாற்றுக்கணக்கான டன் எடையுள்ள செக்மெண்டல் பாக்ஸ்களை சுமார் 7 மீட்டர் உயரத்துக்கு தூக்கி வைக்க முடியாது. இந்த பாலம் கட்டுவதற்கு மொத்தம் 3,648 செக்மெண்டல் பாக்ஸ்கள் செய்யப்பட்டன.
உயர் மட்ட பாலத்தின் இரண்டு பக்கமும் அமைக்கப்படும் பக்கவாட்டு சுவர் ஜெர்மன் ஷெட்டர் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. கான்கிரீட் சுவர் என்றால் சாரம் கட்டி அதன் பின்னர் தான் கட்டப்படும். ஆனால் உயர்மட்ட பாலத்தின் கீழ் வாகனங்கள் சென்று கொண்டிருப்பதால் சாரம் கட்ட முடியாது. இதை தவிர்ப்பதற்காக ஜெர்மன் ஷெட்டர் தொழில் நுட்பத்தில் பக்கவாட்டு சுவர் தானியங்கி முறையில் எந்திரத்தால் கட்டப்பட்டது. மற்ற பாலங்களில் பக்கவாட்டு சுவர் 1.2 மீட்டர் உயரம் தான் இருக்கும். ஆனால் இந்த உயர்மட்ட மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் 1.5 மீட்டர் உயரமுடையதாக உள்ளது.
கோயம்புத்தூர் விமான நிலைய சந்திப்பு, ஹோப் காலேஜ் சந்திப்பு, நவ இந்தியா, அண்ணா சிலை சந்திப்பு ஆகிய நான்கு இடங்களில் இடது பக்கம் இறங்கு தளமும், வலது பக்கம் ஏறு தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இறங்கு தளமும், ஏறு தளமும் தலா 500 மீட்டர் அதாவது அரை கிலோ மீட்டர் துாரம் நீளம் கொண்டவை.
உயர்மட்ட மேம்பாலத்தின் கான்கிரீட் தூண்கள் பல நுாறு டன் எடையுள்ள கான்கிரீட் ஓடு தளத்தை தாங்குவதால் அந்த தூண்கள் அமைப்பதற்கான அஸ்திவாரமும் உறுதியாக போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூணும் 2.5 மீட்டர் நீளம், அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் குறைந்தபட்ச உயரம் 5.5 மீட்டர். ஆனால் ஹோப் காலேஜ் சந்திப்பில் பாலத்தின் உயரம் 10 மீட்டர். இந்த சந்திப்பில் ஏற்கனவே ரயில்வே மேம்பாலம் உள்ளது. பாலத்தின் கீழ் ரயிலும், மேலில் வாகனங்களும் செல்கின்றன. அந்த மேம்பாலத்துக்கு மேல் உயர் மட்ட மேம்பாலம் கட்டப்படுவதால் அதன் உயரம் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட மேம்பாலம் நான்கு வழி பாலமாக கட்டப்பட்டுள்ளது. அதாவது இரண்டு வாகனங்கள் செல்லும் வகையிலும், இரண்டு வாகனங்கள் வரும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் மொத்த அகலம் 17.25 மீட்டர், இதன் நடுவில் 1.2 மீட்டர் அகலத்துக்கு ஸ்டீல் பாரிகேட் மீடியனாக அமைக்கப்பட்டுள்ளது. இது இரவில் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் எதிரில் வரும் வாகன ஓட்டிகளை பாதிக்காத வகையில் அமைக்கப்படுகிறது. மீதம் 16 மீட்டர் அகலத்தில் இரு வழி பாதையாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர சாலையின் இரண்டு பக்கமும் 1.5 மீட்டர் அகலத்துக்கு மழைநீர் வடிகால்கள் மற்றும் குழாய்கள் அமைக்கஇடம்ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டின் முதல் நீண்ட பாலத்தை செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து திறப்பு விழாவிற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
