இராமநாதபுரம்:தேவர் ஜெயந்தி பசும்பொன்னில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!
10/30/2025
0
முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி மற்றும் 62 ஆவது குருபூஜை விழா இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனால், இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில், இன்று காலையில் பசும்பொன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு உள்ள தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தும் இந்த புனித இடம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். 1969 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் இவ்விடத்திற்கு வந்து மரியாதை செலுத்தியுள்ளனர். தேவரின் தேசப்பற்றையும், விடுதலைப் போராட்ட பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில், 1974-ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மணி மண்டபம் கட்டி வழங்கினார். அந்த மணிமண்டபத்தை பாம்பன் பாலம் கட்டிய நீலகண்டனே அமைத்தார்.மதுரையில் தேவர் சிலையை முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரியை அழைத்து வந்து திறந்து வைத்தது கலைஞர் கருணாநிதி தான். தேவரின் புகழை உயர்த்தும் வகையில் பல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மதுரை ஆண்டாள்புரம் மேம்பாலத்திற்கு தேவர் பெயர் சூட்டப்பட்டது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கு, பால்குடம் மண்டபம், சுற்றுப்புறப் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் கலைஞர் தலைமையில் நிறைவேற்றப்பட்டன” எனத் தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கும் கோரிக்கையும் விரைவில் நிறைவேறும் என உறுதியளித்தார். தொடர்ந்து, முத்துராமலிங்க தேவர் வீரராகப் பிறந்து, வீரராக வாழ்ந்து, வீரராக மறைந்து, இன்னும் வீரராகவே போற்றப்படுகிறார் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கே.என். நேரு, மூர்த்தி, ஐ.பெரியசாமி, ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு மற்றும் டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.முன்னதாக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
