முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், கே.ஆர்.ஜெயராமன், கிணத்துக்கடவு தாமோதரன், முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் என்று 500க்கும் மேற்பட்டோர் உப்பிலிபாளையம் பகுதியில் ஒன்று கூடினர்.பின்னர் மேளதாளம் முழங்க பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், ஏராளமான கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் 10 கிலோமீட்டர் தூரம் பயணித்தனர். சாலையை மறித்து அதிமுகவினர் மேற்கொண்ட கொண்டாட்டத்தால் பொதுமக்கள் போக்குவரத்துநெரிசலில் சிக்கி தவித்தனர்.இந்நிலையில் உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மேளதாளங்கள் அடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 400க்கு மேற்பட்டோர் மீது பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, கோவை அவினாசி சாலை, உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டு வின்ஸ் வரை சுமார் 10 கிமீ தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு ரூ.1621 கோடி செலவில் கட்டப்படும் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பணிகள் துவங்கியது.இந்த உயர்மட்ட மேம்பாலத்துக்காக கோயம்புத்தூர் அவினாசி சாலையின் நடுவில் 305 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டுள்ளன. ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையே இருக்கும் தூரம் 30 மீட்டர். ஆனால் கோவை விமானநிலைய சந்திப்பு, ஹோப் காலேஜ் சந்திப்பு, நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மட்டும் இந்த தூரம் 40 மீட்டராக உள்ளது. அந்த 4 இடங்களிலும் பிரதான சாலையுடன் இணைப்பு சாலைகள் சந்திப்பதால் வாகனங்கள் எளிதாக செல்வதற்காக தூண்களுக்கு இடையிலான தூரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பாலாமானது செக்மெண்டல் பாக்ஸ் தொழில்நுட்பத்தில் கட்டப்படுகிறது. அதாவது ஓடுதளம் வெளியிடங்களில் தயார் செய்யப்பட்டு அந்த செக்மெண்டல் பாக்ஸ்களை டிரெய்லர் லாரிகளில் கொண்டு வந்து, ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையில், லாஞ்சிங் கர்டர் வாயிலாக தூக்கி பொருத்தப்பட்டுள்ளது.இந்த பணிகள் இரவில் தான் நடைபெற்றது. ஏனென்றால் பகலில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் நுாற்றுக்கணக்கான டன் எடை கொண்ட செக்மெண்டல் பாக்ஸ்களை சுமார் 7 மீட்டர் உயரத்துக்கு தூக்கி வைக்க முடியாது. இதனால் இரவில் தான் பணிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
