தூத்துக்குடி:ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய வரலாற்று சாதனை!!!

sen reporter
0

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இது துறைமுக வரலாற்றில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இறக்கைகள் கையாளப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து வ.உ.சி. துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், 11.11.2025 அன்று ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை, கடந்த 22.08.2025 அன்று ஏற்றுமதி செய்யப்பட்ட 101 இறக்கைகள் என்ற முந்தைய சாதனையை முறியடித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சரக்கு கையாளுதலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.நடப்பு நிதியாண்டு 2025-26 இல், 2025 அக்டோபர் வரை மொத்தம் 2300 காற்றாலை இறக்கைகளை இத்துறைமுகம் கையாண்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டு 2024-25 அக்டோபர் மாதத்தில் கையாளப்பட்ட 1425 இறக்கைகளைக் காட்டிலும் 61% அதிகமாகும்.சீனாவின் கின்சோவ் துறைமுத்தில் இருந்து எம்.வி. ஜி.எச்.டி. மரினாஸ் கப்பல் மூலம் இந்த இறக்கைகள் கொண்டுவரப்பட்டன. கூடுதல் தளம் -II இல் இரண்டு துறைமுக மொபைல் கிரேன்கள் மூலம் பாதுகாப்பாகவும் திறமையாகவும் இந்த சரக்கு கையாளப்பட்டது. கப்பல் முகமை, சரக்கு கையாளுதல், சுங்க முகவர் மற்றும் தரைவழி போக்குவரத்து பணிகளை என்.டி.சி லாஜிஸ்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கையாண்டது.

89.5 மீட்டர் மற்றும் 76.8 மீட்டர் நீளமுள்ள இந்த இறக்கைகளுக்கு சிறப்பு கையாளுதல் மற்றும் பிரத்யேக சேமிப்பு ஏற்பாடுகள் தேவை. இத்துறைமுகம் சுங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் 1,00,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பிரத்யேக சேமிப்பு வசதி மற்றும் அத்தகைய பெரிய அளவிலான சரக்குகளை சேமிக்க சுங்க பத்திரத்திற்கு வெளியேயும் விசாலமான பகுதியைக் கொண்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை இணைப்பு மற்றும் திறமையான பணியாளர்களின் கிடைப்ப்பு ஆகியவையும் இந்த வரலாற்று சாதனையின் முக்கிய காரணிகளாகும்.வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தா புரோஹித், தனது செய்தியில், ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டது, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு ஆதரவளிப்பதில் துறைமுகத்தின் செயல்திறன், திறன் மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றும், வ.உ.சி. துறைமுகம் வழியாக சரக்குகளை கையாள்வதில் சிறந்த சேவையை வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top