சென்னை:கிண்டியில் 118 ஏக்கரில் பிரம்மாண்ட சுற்றுச்சூழல் பூங்கா! பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!!
11/01/2025
0
சென்னை, கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவிற்கு கொடுக்கப்பட்ட இடமானது தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு தோட்டக்கலைப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நீர்நிலைகளின் கரைகளை சீரமைக்கும் பணிகள், அரியவகை மரங்கள், அழகிய மலர்ச் செடிகள் நடுதல் மற்றும் நாற்றங்கால்பணிகள்ஆகியவைதொடங்கப்பட்டுள்ளன. கிண்டியில் அமைந்துள்ள இந்த சுற்றுச்சூழல் பூங்காவானது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது. 20.09.2024 நாளிட்ட அரசாணையின்படி, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறைக்கு 118 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒப்படைத்தது.இந்நிலத்தில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மழைநீரை சேகரிக்கும் வகையிலும், சென்னையின் மையப்பகுதியை பெரும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் நான்கு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தோட்டக்கலைத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட இந்த நிலத்தில், பல்வேறு இயற்கை சார்ந்த அனுபவத்தினை அளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் பூங்காவை தமிழ்நாடு அரசு அமைக்க திட்டமிட்டிருக்கிறது. குறிப்பாக, பட்டாம்பூச்சி தோட்டம் மற்றும் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் சிறு தீவுகள் போன்றவையும் இந்த பூங்காவில் இடம்பெறவுள்ளன. மேலும் மலர் சுரங்கபாதை, மலர் படுகைகள் உள்ளிட்ட 25 வகையான வசதிகளை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது.இந்த சிறப்புமிக்க பூங்காவின் முதற்கட்ட தோட்டக்கலை பணிகளை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் கணபதி, பிரபாகர ராஜா, அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மகேஷ் குமார், இந்து குழும இயக்குநர் என். ராம். தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை மாநகராட்சி ஆணையர் குமர குருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
