தூத்துக்குடி:வீரமா முனிவரின் 345வது பிறந்தநாள் விழா அமைச்சர் பி.கீதாஜீவன் மரியாதை!!!
11/08/2025
0
தமிழ் வளர்த்த பேரறிஞர் வீரமா முனிவரின் 345வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.தேம்பாவணி என்னும் தமிழக் காப்பியத்தைப் படைத்து வழங்கியவர் வீரமாமுனிவர். இவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவர். கிறித்தவ சமயத் தொண்டுக்காகத் தமிழகம் வந்து, தமிழின் சிறப்பினால் ஈரக்கப்பட்டு, தமிழ்த் தொண்டராகவும் தமிழறிஞராகவும் மாறினார். வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி ஆகும். கிறித்தவ சமயப் பணி செய்வதற்காக, அவர் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கி.பி.1710இல் இந்தியாவுக்கு வந்தார். கோவா, கொச்சி, அம்பலக்காடு வழியாக, மதுரை மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன் பட்டியை வந்தடைந்தார்.தமது சமயப்பணி தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டுமெனில், தமக்குத் தமிழறிவு மிகவும் இன்றியமையாதது என்று நன்குணர்ந்தார். தமிழ்ப்பணி புரிந்த இராபர்ட்-டி-நொபிலி என்னும் மேலைநாட்டு இறையடியாரைப் பற்றி இவர் கேள்விப்பட்டார். அவர்போலவே. தாமும் இறைப்பணியைச் செய்திட விரும்பினார். அதனால், இவரும் தமது பெயரைத் தைரியநாதர் என்று மாற்றிக் கொண்டார். பின்னாளில் மக்கள் இவரை வீரமாமுனிவர் என்றே அழைத்தனர். வீரமாமுனிவர் பெயர் மாற்றம் செய்து கொண்டதோடு, நம்நாட்டில் இருந்த சமயத் தொண்டர்களைப் போலவே, தாமும் நெற்றியில் சந்தனம் பூசி காதில் முத்துக்கடுக்கன் அணிந்து, காவி அங்கி உடுத்தி, புலித்தோல் பதிக்கப்பட்ட இருக்கையில் அமரத்தொடங்கினார்.இப்படி தோற்ற மாற்றம் செய்துகொண்டது மட்டுமல்ல, காய்கறி உணவை மட்டுமே உண்டு. சைவ உணவினராகவும் மாறினார். பல்வேறு தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் அகராதிகளையும் எழுதி வெளியிட்டார். வீரமாமுனிவர் 1747ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே உயிர் நீத்தார். இப்படிப்பட்ட பெருமைக்குறிய வீரமா முனிவர் அவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமா முனிவர் அவர்களின் 345வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில், புனித பரலோக மாதா பசலிகா பங்கு தந்தை மோயிஸ், கயத்தார் வட்டாட்சியர் அப்பனராஜ் மற்றும் சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
