சென்னை:பதிநான்கு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!!!
11/09/2025
0
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாகனம் மூலம் பெண்களுக்கு பிரத்யேகமாக புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு HPV என்ற புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை சார்பில் சைதை தொகுதிக்குட்பட்ட 100 இளம் பெண்களுக்கு ரூ. 50,000 வரை அதிகபட்ச முதிர்வுத் தொகை மற்றும் தென்சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தகுதி வாய்ந்த 100 குடும்பங்களை சேர்ந்த 200 பெண் குழந்தைகளுக்கு ரூ 25,000 அரசு சேமிப்பு பத்திரங்கள் வழங்கும் விழா அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பயனாளிகளுக்கு உரிய தொகையை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், பெண் சிசு கொலை தடுப்பு உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு வந்துள்ளது. ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50 ஆயிரம் குழந்தை பெயரில் பதிவு செய்யப்படும். இரு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு குழந்தை பெயரிலும் ரூ. 50 ஆயிரம் பதிவு செய்ய வேண்டும். இவை குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றார்.தொடர்ந்து, பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் தடுக்கும் வகையில், அவரவர் வசிக்கும் இடங்களுக்கு வாகனத்தை அனுப்பி பெண்களுக்கு மட்டுமே புற்றுநோய் பாதிப்பு குறித்து சோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Women wellness in weel (WWW) பெயரில் மாவட்டத்திற்கு ஒரு வாகனம் என ரூ.41 கோடி செலவில் 10 நாட்களில் முறையாக வாகனம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.ரூ.36 கோடி மதிப்பில் HPV என்ற புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக தமிழ்நாட்டில் உள்ள 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு போடப்பட உள்ளது. இந்த முயற்சி இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல்முறையாக செய்யப்பட உள்ளது. தமிழகத்தை தொடர்ந்து இந்த திட்டம் இந்தியா முழுவதும் தொடங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தான் பெண்களுக்கு என மிகப்பெரிய அளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.மேலும், பேசிய அவர், தமிழகத்தில், டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. டெங்கு பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி மட்டுமல்லாமல் உள்ளாட்சி அமைப்புகளிலும், டெங்கு பாதிப்பை தடுக்க கொசு மருந்து அடிப்பதற்கான வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
