வேலூர்:குடியாத்தத்தில் கட்டப்பட்டுள்ள அரசு தலைமை மருத்துவமனையை விரைவில் திறக்கக் கோரி புதிய நீதி கட்சி சார்பில் மத்திய இணை அமைச்சர் முருகனிடம் மனு!!!
1/03/2026
0
வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் எல். முருகனிடம் வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் பிச்சனூர் பேட்டை, சேலம் தாண்டவராயன் தெருவைச் சேர்ந்த புதிய நீதி கட்சியின் நகர செயலாளர், கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: குடியாத்தத்தில் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான கோரிக்கைகள் பல உள்ளன. அதில் முக்கியமான கோரிக்கைகளான குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை மிக விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2. குடியாத்தம் நகரம் பிச்சனூர் கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அந்த பகுதி மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். எனவே இந்த பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தரவேண்டும். 3. குடியாத்தம் கொண்டசமுத்திரம் காளியம்மன் பட்டியில் கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் கைத்தறி பூங்கா திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் உண்மையான அதாவது எந்தவித ஆதரவும், உதவியும் இல்லாத கைத்தறி நெசவாளர்களை கண்டறிந்து அந்த நெசவாளர்களுக்கு கைத்தறி பூங்காவில் நெசவு செய்ய தாங்கள் வழிவகை செய்ய வேண்டும். 4. குடியாத்தம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்படும் நூல்கள் தரமாக இருக்க வேண்டுமென நெசவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் என் எச் டி சி மூலம் கொள்முதல் செய்யப்படும் நூல்கள் தரமாக இருக்க தாங்கள் வழிவகை செய்ய வேண்டும். 5. குடியாத்தம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நெசவு செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியானது காசோலையாக வழங்குகிறார்கள். இந்த காசோலையை வங்கிக்கு சென்று பணம் பரிவர்த்தனை செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் நெசவு செய்யும் நேரம் குறைகிறது. இதனை கருத்தில் கொண்டு நெசவாளர்கள் பெறும் கூலியை ரொக்கமாக வழங்கினால் நெசவாளர்கள் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். எனவே தாங்கள் மொத்தமாக வழங்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு இந்த ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், கைத்தறி நெசவாளர்கள் பயன்படும் வகையில் செய்து பணிகளை முடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குடியாத்தம் புதிய நீதி கட்சியின் நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
