பல தசாப்தங்களாக, இந்தியாவில் விமானப் பயணம் என்பது சமூகத்தின் ஒரு சிறிய பகுதியினருக்கே உரிய ஆடம்பரமாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று அந்தக் கருத்து வேகமாக மாறி வருகிறது. விடுமுறைக்காக சொந்த ஊருக்குப் பறக்கும் மாணவர்களிலிருந்து, தொழில் காரணமாகப் பயணம் செய்யும் சிறு தொழில்முனைவோர் மற்றும் சிகிச்சைக்காக நகரங்களை அடையும் நோயாளிகள் வரை, விமானப் போக்குவரத்து கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. இந்தியாவின் விமானத் துறை வளர்ச்சி என்பது புதிய விமான நிலையங்கள் அல்லது அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கை மட்டுமல்ல; அது இணைப்புத்தன்மை (Connectivity) எவ்வாறு வாய்ப்புகள், உள்ளடக்கம் மற்றும் பிராந்திய வளர்ச்சியை உருவாக்குகிறது என்பதையும் பிரதிபலிக்கிறது.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக அரசின் உடான் (UDAN - Ude Desh ka Aam Nagrik) திட்டம் அமைந்துள்ளது. விமானப் பயணத்தை மலிவாகவும் அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சிறிய நகரங்களை முக்கிய விமானப் போக்குவரத்து வலையமைப்புகளுடன் இணைத்துள்ளது. இதன் மூலம், அப்பகுதி மக்களுக்கு விமானப் பயணம் தொலைதூர கனவாக இல்லாமல் நடைமுறைப் பயணத் தேர்வாக மாறியுள்ளது. மானியக் கட்டணங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிராந்திய விமான நிலையங்கள் விமானச் சேவையை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளன.இத்திட்டங்கள் இணைப்புத்தன்மையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றன. சிறந்த விமான இணைப்புகள் சுற்றுலாவை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், விருந்தோம்பல், தளவாடம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவுகின்றன.
இந்தியாவின் விமானப் போக்குவரத்து வலையமைப்பை விரிவுபடுத்தும் அரசின் பரந்த நோக்கம், வரும் ஆண்டுகளில் செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதில் பிரதிபலிக்கிறது. இணைப்புத்தன்மை பெருநகரங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்படக்கூடாது என்ற எண்ணமே இந்த விரிவாக்கத்தின் அடிப்படையாகும். அதற்கு பதிலாக, சிறிய நகரங்களும் வளர்ந்து வரும் பொருளாதார மையங்களும் தேசிய போக்குவரத்து வலையமைப்பின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.
விமானப் போக்குவரத்து பின்தங்கிய பகுதிகளை அடையும் போது, பயண நேரம் பெருமளவில் குறைகிறது; சந்தைகள், கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகலும் மேம்படுகிறது. இந்தியாவின் விமானத் துறை வளர்ச்சி, பிரதமர் கதி சக்தி (PM Gati Shakti) போன்ற திட்டங்களுடனும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைந்த தளவாட வலையமைப்பாக இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், விமான நிலையங்கள் தனிமையில் செயல்படும் அமைப்புகளாக இல்லாமல், வணிகம் மற்றும் பிராந்திய வளர்ச்சியை ஆதரிக்கும் முக்கிய நுழைவாயில்களாக மாறுகின்றன. குறிப்பாக நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்கள் மற்றும் தொலைதூர மாவட்டங்களுக்கு இந்த அணுகுமுறை மிகவும் முக்கியமானதாகும். மேம்பட்ட இணைப்புத்தன்மை அப்பகுதிகளின் பொருளாதார வாய்ப்புகளை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றக்கூடியதாக உள்ளது.:
இந்தியாவின் விமானப் போக்குவரத்து வளர்ச்சியின் மற்றொரு முக்கிய அம்சம் அதன் வேலைவாய்ப்பு உருவாக்கும் திறன் ஆகும். விமான நிலைய கட்டுமானம், விமான சேவைகளின் விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு சேவைகள் பல்வேறு திறன் நிலைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. தரை பணியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், விருந்தோம்பல் துறை ஊழியர்கள் மற்றும் தளவாட சேவை வழங்குநர்கள் அனைவரும் இத்துறையின் வளர்ச்சியால் பயனடைகின்றனர்.
விமான சேவைகள், விமான பராமரிப்பு மற்றும் விமான நிலைய நிர்வாகம் போன்ற துறைகளில் இளைஞர்களைத் தயார்படுத்த பயிற்சி நிறுவனங்களும் விரிவடைந்து வருகின்றன. சிறிய நகரங்களில் வாழும் பல இளைஞர்களுக்கு, நிலையான வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான புதிய பாதையாக விமானத் துறை உருவெடுத்து வருகிறது.
விமானத் துறை இந்தியாவின் சுற்றுலா பொருளாதாரத்தையும் வலுப்படுத்தியுள்ளது. வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதிகளில் உள்ள இயற்கை மற்றும் மத சுற்றுலா தலங்களுக்கு மேம்பட்ட விமான இணைப்புகள் கிடைத்ததால் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் பயணம் எளிதாகியுள்ளது. அதேபோல், கொச்சி மற்றும் கண்ணூர் போன்ற நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, கைவினைப் பொருட்கள், விடுதிகள், போக்குவரத்து சேவைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட உள்ளூர் வணிகங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் முன்களப் பணியாளர்களை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்ல விமான நிலையங்கள் முக்கிய மையங்களாக செயல்பட்டன. இந்த அனுபவங்கள், விமான உள்கட்டமைப்பு என்பது வெறும் பொருளாதாரச் சொத்து மட்டுமல்ல; அது ஒரு சமூகத் தேவையும் என்பதை வெளிப்படுத்தின.
இதற்கிடையில், இந்தியாவின் விமானப் போக்குவரத்து விரிவாக்கம் நிலைத்தன்மை (Sustainability) குறித்த கவலைகளாலும் வழிநடத்தப்படுகிறது. பசுமை விமான நிலையங்களை உருவாக்குதல், எரிபொருள் திறனை மேம்படுத்துதல் மற்றும் நிலைத்த விமான எரிபொருட்களை ஆராய்தல் போன்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பொறுப்புக்கும் இடையே சமநிலையைப் பேணுவது மிகவும் அவசியமாகும்.
எனவே, இந்தியாவின் விமானப் போக்குவரத்து வளர்ச்சி என்பது வெறும் விமானங்களின் எண்ணிக்கை அல்லது விமான நிலையக் கட்டிடங்களின் விரிவாக்கம் பற்றியது மட்டும் அல்ல.
விமான நிலையங்கள் சிறிய நகரங்களுக்கும் சென்றடையும் போது, மேலும் பல குடிமக்கள் வானத்தை நோக்கிப் பயணிக்கும் போது, விமானத் துறை இயக்கத்தில் இருக்கும் இந்தியாவின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார பங்கேற்புக்கான புதிய வாயில்களை அது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திறந்து வருகிறது.
