தமிழக நியாயவிலை கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசிகள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. நீண்டக்காலமாக இந்த தொழில் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது பறக்கும்படையினர் காவல்துறையினர் கடத்தல் அரிசி மூட்டைகளை மட்டுமே பிடிப்பார்கள் ஓட்டுனர்கள் தப்பி ஓடி விடுவார்கள். .
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. ரேசன் அரிசி கடத்தும் கும்பலை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரியை அடுத்த கோவளம் கடற்கரை கிராம பகுதியில் இருந்து சொகுசு காரில் கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் கேரள பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருப்பதை பார்த்தனர். போலீசாரை கண்டதும் சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் 1½ டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் கைது செய்யப்பட வேண்டும். விசாரணையில் பொதுமக்களிடமிருந்தது அரிசி பெற்றதாக நிரூபமானால் அவர்களது ரேசன்கார்டை ரத்து செய்ய வேண்டும். மாறாக அதிகாரிகள் தப்பு செய்து இருந்தால் கண்காளிப்பாளர் எடைபோடுபவர் வரை வேலை நீக்கம் செய்ய வேண்டும். என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.