நாகர்கோவில், ஜூலை. 14-
தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை பெற தகுதியானவர்களை கண்டறிய சிறப்பு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி
மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமை தொகை வருகிற செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகை பெற வீட்டு பரப்பளவு, குடும்பமாத வருவாய், மின்சார பயன்பாடு என்று சில தகுதிகளை நிர்ணயம் செய்துள்ளது.
இந்த தகுதிகள் அனைத்தும் உடையவர்களுக்கு மட்டும்தான் உரிமை தொகை கிடைக்கும் இதற்காக தகுதியானவர்களை கண்டறிய தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வட்ட வழங்க அலுவலகம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மனு வழங்கப்படும்.
அதன்பின்னர், வட்ட வழங்க அலுவலகங்களில் உள்ள ரேஷன் கார்டு பிரின்ட் செய்யும் இயந்திரம் பொருத்திய கணினியில் சிறப்பு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் குடும்ப தலைவி மற்றும் ஆண்களின் ஆதார் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளதால், மின்கட்டணம், வங்கி
பணபரிவர்த்தனை முதல் தேவையான அனைத்து விவரங்களையும் அந்த செயலியே சரி பார்த்து தகுதியான கார்டுகளை கண்டறிந்து விடும்.
எனவே இதில் எந்த விதிமீறலும் நடக்க வாய்ப்பு இருக்காது என்று வட்ட வழங்கல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் கணக்குபடி 5 லட்சத்து 77 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த மாதம் இதன் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும். மகளிர் உரிமை தொகை காரணமாக புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பம், பெயர் நீக்கல், சேர்த்தல் போன்றவற்றை துல்லியமாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.