காமராஜரின் 121 வது பிறந்த நாளை தமிழ் கூறும் நல்லுலகமே கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. சாதி ,மதம், அரசியல் வேறுபாடுகளை கடந்து
அவர் கொண்டாடப்படுவதற்கு காரணம் என்ன? ஒன்பது ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அவர் விட்டுச் சென்ற சொத்துக்கள் ஒரு சில துணிமணிகள்தான்.பொது வாழ்க்கைக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவர்களுக்கு ஒரு "அகராதி "யாக திகழும் காமராஜர் பற்றி ஒவ்வொருவரும் குறிப்பாக இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.!
விருதுநகரில் 1903 ம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, குமாரசாமி- சிவகாமி தம்பதியருக்கு பிறந்தார் காமராஜர்.அது ஒரு ஏழ்மையான குடும்பம்.
காமாட்சி என்ற குலதெய்வப் பெயரை அடிப்படையாக வைத்து காமராஜ் என்று அவருக்கு பெயர் சூட்டப்பட்டது.அவரை படிக்க வைத்து விட வேண்டும் என்று குடும்பத்தார் விரும்பினர்.
அப்போது விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம்.
காமராஜருக்கு பள்ளிக்கு செல்வதை விட ,பள்ளிக்கு செல்லும் வழியில் நாட்டு நடப்பு குறித்தும் சுதந்திர போராட்டம் பற்றியும் கூட்டமாக நின்று செய்தித்தாளை படித்துக் கொண்டிருப்பவர்கள் அருகில் நின்று கேட்பதுதான் பிடித்திருந்தது.
படிப்பதில்தான் ஆர்வம் இல்லை என்று ஒரு துணிக்கடையில் வேலைக்கு சேர்த்து விட்டார்கள் . அங்கேயும் அவருக்கு ஆர்வம் இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுதந்திரப் போராட்ட கூட்டங்களுக்கு சென்று வந்தார்.
திருமணம் செய்து வைத்தாலாவது திருந்துவான் என்று முயற்சி எடுத்தார்கள். அந்த முயற்சியும் அவரிடம் எடுபடவில்லை.
அடிமைப்பட்டு கிடக்கும் தாய் நாட்டை அந்நியர்களிடமிருந்து மீட்க வேண்டும் அந்த ஒரே இலட்சிய வெறி தான் அவரிடம் இருந்தது. காந்தியடிகளின் தலைமையில் நாடே ஓரணியில் திரண்டு நின்றது. நாட்டுக்காக அந்த வேள்வி தீயில் அவரும் குதித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்து காந்தியடிகளின் போராட்டங்களை தமிழ்நாட்டில் உறுதியாக நடத்தும் போராளிகளில் ஒருவராக மாறினார்.
அடுத்தடுத்து சிறை
வாழ்க்கையை அனுபவித்தார்.
ஜெயில் வாழ்க்கை என்பது இப்போது உள்ளது போல் அப்போது கிடையாது. பல கொடுமைகளை அனுபவித்தாக வேண்டும்.
சிறையிலிருந்து வெளியில் வந்த போதெல்லாம் அவருக்கு திருமணம் செய்து வைத்து அவருடைய வாழ்க்கைப் பாதையை மாற்றிவிட உறவினர்கள் முயன்றனர்.
சிறை பறவையாக உள்ள என்னால் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பின்னாளில் அவர் பெரிய பெரிய பதவிகளை வகித்த போதும் இதே பொதுநல அணுகுமுறை தான் கொண்டிருந்தார்.
அவருடைய அரசியல் குரு சத்தியமூர்த்தியின் வழியில் காங்கிரஸ் கட்சியில் வேகமாக வளர்ந்தார். தமிழக மக்கள் மனதிலும் காங்கிரஸ் தொண்டர்களிடமும் தனி இடம் பிடித்தார்.
1942-ல் காந்தியடிகள் அறிவித்த "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தின் போது, போலீசின் கைகளில் சிக்காமல் தான் செய்ய வேண்டிய அத்தனைப் போராட்டப் பணிகளையும் செய்து முடித்த பின்னரே
கைது நடவடிக்கைக்கு உட்பட்டார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகி
அவர் செய்த முதல் வேலை ,குலக்கல்வி திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மூடப்பட்ட பள்ளிக்கூடங்களை திறந்ததுதான்.அப்போது கல்வித் துறை செயலாளராக இருந்த நெ.து. சுந்தரவடி வேலு காமராஜரின் எண்ணங்களை செயல்படுத்தினார்.
எதிரணியில் இருந்த செயல் திறன்மிக்க சி. சுப்ரமணியம் போற்றவர்களை தன் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார்.
கல்வியின் சிறப்பை உணர்ந்த அவர் பதவிக்கு வந்தவுடன் மூடப்பட்டிருந்த 6 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்தார். ஒவ்வொரு கிராமமும் தொடக்கப் பள்ளியை கொண்டிருக்க வேண்டும் என்பது அவருடைய லட்சிய கனவாக இருந்தது.
தொடக்கப்பள்ளி முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை இலவச கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
ஒருமுறை சாலையில் பயணிக்கும் போது, மதிய வேளையில் சாலையோரம் நின்றிருந்த சிறுவனைப் பார்த்து "ஏன் பள்ளிக்கூடம் போகல" என்று கேட்டார்.
அதற்கு அவன் " பள்ளிக்கூடம் போனா யாரு சோறு தருவா? என்றான். அந்த வார்த்தை தான் மதிய உணவு திட்டத்திற்கு விட்டது.
ஏழை எளிய குடும்பத்து பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட இந்த திட்டம்
உலகின் கவனத்தை
ஈர்த்தது.
பள்ளிக்கூடங்களில் ஏழை பணக்கார குடும்பத்து மாணவர்கள் வேறுபாட்டை தவிர்க்கும் வகையில் பள்ளிசீருடை திட்டத்தை அமல்படுத்தினர்.
அவர் முதலமைச்சர் ஆக இருந்த 1954- 1963
தமிழ்நாட்டின் பொற்காலமாக கருதப்படுகிறது. அவர் ஆட்சியில்
தமிழ்நாட்டில் கல்வி கற்றவர்களின் வளர்ச்சி விகிதம் 30 சதவீதம் உயர்ந்தது.
விவசாயத்தின் அருமை, விவசாயிகளின் நலனை உணர்ந்து ஏராளமான அணைகளை கட்டினார். மணிமுத்தாறு அணை, ஆழியாறு, வைகை, சாத்தனூர் அணை என்று தமிழக முழுவதும்
வாய்ப்பு உள்ள இடங்களில் அணைகளை கட்டி முடித்தார்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம்,திருச்சி "பெல் ", பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, ஊட்டியில் போட்டோ பிலிம் நிறுவனம் என்று தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றினார்.
"மக்களுக்கு இது நல்லது என்று முடிவு செய்துவிட்டால்" அதை முடித்து விட்டு மறு வேலை பார்க்கும் செயல் திறன் அவருக்கு இருந்தது.
ஒரு குழாய் பதிக்கும் பணி நடைபெற்ற போது அது நெடுஞ்சாலையை
தாண்டி செல்ல வேண்டி இருந்தது, அதிகாரிகள் முதலமைச்சர் காமராஜரை அணுகி இதற்கு மத்திய அரசு அனுமதி வேண்டும் என்ற போது, " இரவோடு இரவாக செய்து முடியுங்கள், மக்களுக்காக தானே செய்கிறோம், மத்திய அரசிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம்"
என்று சொல்லி நடவடிக்கை எடுக்கும் நேர்மையும் நியாயத் துணிவும் அவரிடம் இருந்தது. அதனால்தான் பிரதமரான நேருவை நிமிர்ந்து நின்று எதிர்கொண்டார்.
தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்காக அவர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியபோது நிதி பற்றாக்குறை ஏற்பட்டது.
வருமானத்திற்கு கள்ளுக்கடை திறக்கலாமா? என்ற ஆலோசனை அவரிடம் சொல்லப்பட்ட போது கடுமையாக சீறினார்.
சொந்த ஊரான விருதுநகரில் தனியாக வசித்த தாயாரை சென்னையில் இருந்த தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வர மறுத்துவிட்டார். தாயைப் பார்க்க வரும் சாக்கில் உறவினர் யாராவது முதலமைச்சர் வீட்டை பயன்படுத்தி
தப்பு பண்ணி விடக் கூடும் என்று பயந்தார்.
உறவினர்களிடமிருந்து விலகி இருந்தார்.
கவர்ச்சி ,விளம்பர அரசியலை அவர் வெறுத்தார். அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என்று பயணித்தாரே தவிர அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக குறுக்கு வழிமுறைகளை கனவில்கூட யோசிக்கவில்லை.
இதன் விளைவாக 1967 தேர்தலில் சொந்த தொகுதியிலே தோற்கடிக்கப்பட்டார்.
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர் ,நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர் ,9 ஆண்டுகள் முதலமைச்சர், ஐந்து வருடம் தேசிய காங்கிரஸ் தலைவர்
ஆகிய பொறுப்புகளில் இருந்த தன்னை ஒரு சாதாரண இளைஞன் தோற்கடித்தது பற்றி அவர் கருத்து சொன்ன போது " இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி" என்றார்.
1973 ஆம் ஆண்டு மதுரை அருகே நள்ளிரவில் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் . அதில் பங்கேற்கச் சென்றார் காமராஜர். மேடையில் பேசிக் கொண்டிருந்தது ஒரு பள்ளி சிறுவன. அழகாக அபாரமாக பேசினான். காமராஜரை புகழ்ந்து தள்ளினான். அவன் பேசி முடித்ததும் அருகில் அழைத்தார் காமராஜர். "பள்ளி மாணவனுக்கு இங்கே என்ன வேலை, ஒழுங்காக படிக்கிற வேலையை போய் பார், உன்னால் ஐஏஎஸ் ஆக முடியும் "என்றார்.
காமராஜரின் வாக்கு பலித்தது. தமிழ் வழியில் ஐஏஎஸ் படித்து, ஒரிசா மாநில தலைமைச் செயலாளராக, இந்திய அளவில் பல்வேறு உயர்பதவிகள் வகித்த பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் தான் அந்த மாணவர். ஆய்வறிஞரான பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், சிந்துவெளியில் வாழ்ந்தது தமிழர்கள் தான் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தவர். அது திராவிட நாகரிகம் என்பதற்கான பல்வேறு வரலாற்றுச் சான்றுகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
பாலகிருஷ்ணன் இன்றைக்கு மேடைதோறும் இதைச் சொல்லி வருகிறார். இவர் மூலம்
மிகப்பெரிய வரலாற்றுக் கருவூலம் இன்றைக்கு தமிழ் உலகுக்கு கிடைக்க வித்திட்டவர் காமராஜர்.
தனக்காக தன் அரசியலுக்காக யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் அவர் எப்போதும் குறியாக இருந்தார்.
ஒருமுறை ஒரு ஏழைத் தொண்டர். காமராஜருடன் மிக நெருங்கி பழகியவர்.
தன் பிள்ளை கல்யாணத்துக்கு வரும்படி காமராஜரை நேரில் சந்தித்து உரிமையுடன் அழைத்தார். "எனக்கு நிறைய வேலை இருக்கு,வர இயலாது நீ போ என்று அவரை விரட்டி விட்டார், காமராஜர்.
தலையை தொங்க போட்டுக் கொண்டு வீடு திரும்பிய அவரை உள்ளூர் மக்களும் உறவினர்களும் கிண்டல் செய்தனர். "ஏழைப்பங்காளர், பணக்காரர்கள் வீட்டுக்கு தான் போவார்" என்று ஏளனம் செய்தனர்.
திருமணம் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த ஏழையின் வீட்டு முன்பு வந்து நின்றார் முதலமைச்சர் காமராஜர். அந்தத் தொண்டருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.ஒரு வார்த்தை முன்னரே சொன்னால் நான் உங்களை வரவேற்க ஏற்பாடு செய்திருப்பேனே என்றார்.
"கிறுக்கா "நீ கடன் வாங்கி அப்படி செலவு செய்து விடுவாய் என்று தான் நான் உன்னிடம் சொல்லவில்லை, என்று செல்லமாக கண்டித்து மணமக்களை வாழ்த்தி விட்டுச் சென்றார்.
நேர்மையாக வாழ்ந்த சக மந்திரிகளையும் ஊக்கப்படுத்த அவர் தவறவில்லை. ஒரு பொதுக்கூட்டத்தில் தன்னுடைய நேர்மையைப் பற்றி பேசிக் கொண்டிருந்த பேச்சாளரை சத்தம் போட்டு நிறுத்தி, " இங்க பாரு, எனக்கு பிள்ளை குட்டி கிடையாது, பிள்ளைக் குட்டிகள், குடும்பத்தை வைத்துக் கொண்டு நேர்மையாக இருக்கிறாரே அமைச்சர் கக்கன் அதுதான் சிறப்பு" என்றார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ,தான் மருத்துவராக காமராஜர் தான் காரணம் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவருக்கு புகழாரம் சூட்டுவது வழக்கம்.
ஏராளமான தாழ்த்தப்பட்ட ,பழங்குடி மற்றும் பிற்பட்ட மக்கள்
உயர் பதவிகளை எட்டுவதற்கு காரணமாக இருந்தவர் காமராஜர். இதற்காக முதன் முதலில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர வைத்தவர் காமராஜர் .
ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் சமூகத்தில் பெரும் புரட்சிகளை ஏற்படுத்திய தந்தை பெரியாரை அவர் பெரிதும் மதித்தார்.
அவர் ஆலோசனைகள் பலவற்றை செயல் படுத்தினார்.
இளைஞர்களுக்கும் தகுதி வாய்ந்த மற்றவர்களுக்கும்
உரிய பதவிகள் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்,
முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டது, தேச அளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. பல தலைவர்கள் அவரை பின்பற்றினர். , அவருடைய திட்டம் " கே " பிளான் என்று அழைக்கப்பட்டது.
காமராஜர் கட்சி பணிக்கு திரும்பி, தேசிய காங்கிரஸ் தலைவரானார். கட்சியில் பிரச்சினை எழாதவாறு,
இந்திரா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி
பிரதமராவதற்கு வழி வகுத்தார். இதனால் "கிங் மேக்கர்"என அழைக்கப்பட்டார்.
'மக்கள் ,மக்கள் நலன் "என்று வாழ்ந்த அந்த கர்மவீரர் தன்னுடைய 72 வது வயதில், 1975 ம் ஆண்டில் தன் வழிகாட்டியான காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2 ம் தேதி மறைந்தார்.
அவருக்கு மிகவும் பிடித்த பண்பு" காலம் தவறாமை"ஆகும். "ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே புகட்டுவதற்கு சமம்" என்ற வார்த்தையை அவர் அடிக்கடி உச்சரிப்பது வழக்கம்.
இந்த காலத்தில் இப்படி ஒரு அரசியல்வாதியா?
என்று நம்ப முடியாத ஒரு ஆளுமை கொண்டவராக திகழ்ந்தார். ரேஷன் கடையில் பயன்படுத்தும் அதே ரக அரிசியைதான் தன் வீட்டிலும் சமைக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தார்.
அவருடைய உதவியாளர் வைரவன் மெதுவாக ஒருமுறை அவரிடம் அணுகி அரிசியை மாத்தி சமைக்கட்டுமா என்று கேட்டபோது," லட்சக்கணக்கான ஏழை மக்கள் அதை சாப்பிடும் போது நாம் மட்டும் உயர்ந்த ரகத்துக்கு மாறலாமா? என்று கேட்டு மறுத்துவிட்டார், அந்த ஏழை பங்காளர்!
காமராஜரின் சமகாலத்தில் வாழ்ந்து அவரை எதிர்த்து கடுமையாக அரசியல் செய்தவர் கலைஞர் கருணாநிதி. அதேசமயம் அவருடைய அருமை பெருமைகளை நன்கு உணர்ந்தவர். கல்விக்கண் திறந்த காமராஜர் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மாணவர்களாலும் கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பினார். அவர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவித்து அதை சட்டமாகவே ஆக்கினார்.
எந்த ஆட்சி தமிழகத்தில் பொறுப்பில் இருந்தாலும் காலம் காலமாக காமராஜர் புகழ் பாடப்பட வேண்டும்
என்ற எண்ணத்தை அவர் நிறைவேற்றிக் கொண்டார்.அவர் எண்ணப்படி, இந்தப் பிறந்த நாள் சனிக்கிழமை வந்தபோதிலும், அன்று பள்ளிக்கூடத்தை திறந்து வைத்து காமராஜர் பிறந்த நாளை கொண்டாட தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அபூர்வ மாமனிதர் பெருந்தலைவர் காமராஜர். அவர் தமிழ் மண்ணில் பூத்த அபூர்வ கருப்பு வைரம். அதனால்தான் தமிழ் உலகம் அவரை பெருமை பொங்க போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.!
- அந்துவன் ஆதன்.