கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையும், வெள்ளமோடி தனியார் கல்லூரியும் இணைந்து நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட 52 வார்டுகளிலும் உணவு வணிகர்களின் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியுள்ளது. வரும் 28ம் தேதி வரை இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு இந்த பணிகள் நடக்கிறது.
இந்த கணக்கெடுப்பில் உணவு வணிகம் செய்யும் வணிகர் பெயர், அவர் என்ன தொழில் செய்கிறார், உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத் துறையின் உரிய உரிமம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளாரா? சான்றிதழ் பெறவில்லையெனில் சான்றிதழ் பெறுவதற்கு முகாம் நடைபெறும் பதிவு சான்று பெற்றிருந்து
காலாவதியாகியிருந்தால் அபராத கட்டணம் இன்றி எவ்வாறு புதுப்பித்தல் செய்வது? போன்ற பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் நோக்கில் இந்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உணவு வணிகர்கள் கணக்கெடுப்பு பணிக்காக நேற்று முன்தினம் கல்லூரி நியூட்ரிசன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர். செந்தில்குமார் தலைமையில் மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரநாராயணன், குமாரபாண்டியன், தக்கலை உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன் ரகு ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
இந்த கணக்கெடுப்பு பணிக்கு 9 குழுக்கள் பிரிக்கப்பட்டு வடசேரியில் அனைத்து தெருக்களிலும் நேற்று கணக்கெடுப்பு பணி நடந்தது. கல்லூரி துறை தலைவர் பிரின்சி குழுவை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார்.