தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பத்து அம்சக் கோரிக்கைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க ஆதரவு

sen reporter
0

 தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், விவசாயிகள் நலனுக்கான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, ஜூலை 5 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 16 இடங்களில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தினை நடத்தி வருகிறது.


விவசாயிகள் நலன் காக்கவும், சுற்றுச் சூழல் வளம் பெறவும் இந்திய அரசிடம் நான்கு கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசிடம் ஆறு கோரிக்கைகளையும் முன்வைத்து, அவைகளை நிறைவேற்றித் தருமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் இந்தப் போராட்டத்தினை நடத்தி வருகிறது.

இந்திய அரசு நியமித்த எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றித் தருமாறும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தை காப்பீடு செய்த உழவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் இழப்பீடு பெறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டியும், தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கும் திட்டத்தை செயலிழக்கச் செய்யும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டியும், உழவர்களின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யுமாறு வேண்டியும் ஒன்றிய அரசிடம் இந்தச் சங்கம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டியும், வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டை உயர்த்தித் தருமாறும் தொழிற்பேட்டைகளுக்கு விவசாய நிலங்களை எடுப்பதை தடை செய்யுமாறும், ஆனைமலை ஆறு, நல்லாறு திட்டத்தையும், அப்பர் அமராவதி அணைத் திட்டத்தையும் விரைந்து செயல்படுத்தவும், அமராவதி அணையை தூர் வாரவும், கொப்பரை தேங்காய், பச்சை தேங்காய், நெல், கரும்பு, மரவள்ளிக் கிழங்கு, மஞ்சள், மக்காச் சோளம் ஆகிய விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தித் தருமாறும் தமிழ்நாடு அரசிடம் இந்தச் சங்கம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் முன்வைத்துள்ள இக்கோரிக்கைகளை மறுமலர்ச்சி தி.மு.கழகம் முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் இவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து, விவசாய பெருமக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top