திருச்செந்தூர் கடற்கரையில் சூரனை சம்ஹாரம் செய்த முருகன்.வட்டமிட்ட கருட பகவான். எதிரொலித்தது அரோகரா முழக்கம்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாக போற்றப்படும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை கடற்கரையில் நடந்தது.
வேல் கொண்டு சூரபத்மனை ஜெயந்தி நாதர் சம்ஹாரம் செய்த போது கூடியிருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா முழக்கம் கடல் அலையை தாண்டி எதிரொலித்தது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி,
கந்த சஷ்டி விழா ஐப்பசி அமாவாசைக்கு மறுதினம் பிரதமை துவங்கி சஷ்டி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 13ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
இதனையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி கந்த சஷ்டி விரதத்தை தொடங்கினார்.
முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
ஜெயந்தி நாதர்: தீபாராதனைக்கு பின் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபதுமன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலையில் கோவில் கடற்கரைக்கு வந்து முருகனை எதிர்பார்த்து காத்திருந்தான்.
சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகளை அணிந்து, சிறப்பு அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபதுமன் உள்ளிட்ட அசுரர்கள் வதம் செய்ய மாலையில் கடற்கரைக்கு புறப்பட்டு வந்தார்.
அலைகடலென திரண்ட பக்தர்கள்: முருகனின் வருகையை எதிர்பார்த்து கடற்கரையில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை கண்டதும் கந்தனுக்கு அரோகரா.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று வெற்றி முழக்கமிட்டு வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து அசுரர்களை சம்ஹாரம் செய்தார் ஜெயந்தி நாதர். ஆண்டுதோறும் இந்த விழா திருச்செந்தூரில் நடைபெற்றாலும் வருடா வருடம் அதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுதலாக, திருச்செந்தூருக்கு வருகை தந்தனர்.
யானை முகன் தாரகாசூர வதம்: கந்த சஷ்டி விழாவிற்காக விரதமிருந்த பக்தர்கள் இன்றைய தினம் கடற்கரையில் சூரசம்ஹாரம் காண குவிந்தனர். சூரபதுமனின் தம்பியும், யானைமுகம் கொண்டவனுமாகிய தாரகாசூரன் முதலில் தனது பரிவாரங்களுடன் தலையை ஆட்டியபடி ஜெயந்தி நாதரை நோக்கி போர் புரிய சுற்றி வந்தான். தாரகாசூரனை பார்த்த ஜெயந்திநாதர் வேல் கொண்டு வதம் செய்து அவனது தலையை கொய்தார்.
சிங்கமுகாசூரன் வதம்: சூரபத்மனின் மற்றொரு தம்பியான சிங்கமுகம் கொண்ட சிங்கமுகாசூரன் தலையை ஆட்டியபடி வந்தான். ஜெயந்திநாதரை வலம் இடமாக சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருகன் தனது வேலால் வதம் செய்தார். சகோதரர்கள் வீழ்ந்ததை தொடர்ந்து மூன்றாவதாக சூரபத்மன் போரிட வந்தான்.
வேல் கொண்டு சம்ஹாரம்: சூரபத்மன் நேரடியாக போரிடாமல் மாய வடிவெடுத்து முருகனுக்கு போக்கு காட்டினான். கடலானான், மரமானான். முருகனின் வேலிடம் இருந்து அவன் தப்ப முடியுமா? மாமரமாக வடிவமெடுத்து வந்த சூரபத்மனை இரண்டாக பிளந்து சம்ஹாரம் செய்தார். இந்த காட்சியை கண்டு, கடற்கரையில் கூடி இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.
தலையா கடல் அலையா: வேல் கொண்டு சம்ஹாரம் செய்த சூரனை தன்னுடன் சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஆட்கொண்டார். சிங்க முகாசூரன் உமையம்மையின் சிங்க வாகனமாக மாற்றப்பட்டான். தாரகாசூரன் அய்யனாரின் யானை வாகனமாக ஆக்கப்பட்டான்.
தன்னை எதிர்த்து போரிட்ட அசுரர்களை ஆட்கொண்ட தலம் இந்த திருச்செந்தூர். சூரசம்ஹாரம் நிகழ்வினைக் காண கடற்கரையில் கூடிய கூட்டம் தலையா? கடல் அலையா? என்ற வியப்பை ஏற்படுத்தியது
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தபோது, அந்த பகுதியில் வானில் கருடன் வட்டமிட்டது பக்தர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
ஒவ்வொரு வருடமும் சூரசம்ஹாரம் நடைபெறும்போது வானில் கருடன் வட்டமிடுவது வழக்கம். இந்த வருடமும் அந்த தெய்வீக நிகழ்வு நடைபெற்றதை பக்தர்கள் கண்ணார கண்டு வணங்கினர்.
அசுரர்களின் சாம்ராஜ்ஜியம்: சூரசம்ஹாரம் பற்றி கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. காசிபமுனிவருக்கும், அசுர குலத் தோன்றலாகிய மாயைக்கும் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி ஆகியோர் பிறந்தனர். காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார்.
அசுரர்கள் பெற்ற வரம்: சூரபத்மனும் அவனது தம்பியரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டனர். தவத்தின் பயனாக, சூரபத்மன் சிவபெருமானிடம் 1008 அண்டங்களையும், 108 யுகங்கள்வரை ஆளும் வரத்தைப் பெற்றான். தம்பியரான தாரகனும் சிங்கமுகனும் வரங்களைப் பெற்றனர்.
சூரபத்மன் பெற்ற வரம்: சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டான்.
சூரபத்மனின் அட்டகாசம்: சாகா வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவன் சகோதரர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரின் ஆசியுடன் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர்.
இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான். இந்திரனின் மகனான ஜயந்தனையும் அவனது தோழர்களையும் கிரெளஞ்ச மலையில் சிறை வைத்தான சூரபத்மன்.
அக்னியில் உதித்த ஆறுமுகன்: ஒரு கட்டத்தில் அளவு கடந்து இனி தாங்க முடியாது என்ற நிலைமை உண்டாயிற்று. தேவர்கள் எல்லோரும் கூடிச் சிவபெருமானைச் சரணடைந்தனர். தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க அவற்றிலிருந்து தோன்றிய ஆறு ஆறு தீப்பொறிகளையும் எடுத்துச் சென்று கங்கையிடம் அளித்தான். அவள் அவற்றைத் தனது உற்பத்தித் தானமாகிய நாணற்காட்டில் இருந்த சரவணப் பொய்கையில் விட்டாள். அங்கு அவை ஆறும் அழகிய குழந்தைகளாக உருவாயின.
தமிழ் கடவுள் முருகன்: அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர்.
வேல் கொடுத்த பார்வதி: சிவபெருமான் முருகனை அழைத்து, "குமாரனே! நீ விரைந்து சென்று சூரனாதியரை வென்று தேவர்களுக்கு வாழ்வு தருக" என்று ஆணை மொழிந்தார். பிறகு சிவபெருமான் தனது அம்சமான பதினோரு ருத்திரர்களின் அம்சத்திலிருந்து பதினோரு ஆயுதங்களை அளித்தார். பிறகு பார்வதியிடம் "முருகனுக்கு ஆயுதமொன்றை வழங்குக" என்றார். பகைவரை எளிதில் அழித்து வெற்றியை அடைந்து மீள்வதுமான வலிய வேலாயுதத்தைப் படைத்து அவரிடம் அளித்தாள். சிவசக்தியரின் அம்சமாகவே வேல் தோன்றியது.
சூரசம்ஹாரம்: முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான். ஆயிரத்தெட்டு அண்டங்களையும், நூற்றெட்டு யுகங்கள் ஆண்ட சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். சேவலும் மயிலுமாக ஆக்கி, தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக்கொண்டு, அவனுக்கும் கௌரவம் அளித்தார்.
திருக்கல்யாணம்: சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச்செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான்.
