கீழடியில் முதல், இரண்டாம் கட்ட அகழாய்வுகளில் மத்திய தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்ட 5,765 பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கனிமொழி மதி, கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனுவில் கீழடி முதல், இரண்டாம் கட்ட அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட பொருள்கள் குறித்து அமா்நாத் ராமகிருஷ்ணன், மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தாா். அவரால் கண்டறியப்பட்ட தொல்லியல் பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்கா பூா்வாலா, நீதிபதி பி. தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பணிபுரியும் தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது.
மத்திய அரசு 9 மாதங்களில் கீழடியில் நடத்திய முதல், இரண்டாம் கட்ட அகழாய்வுகள் குறித்த அறிக்கையை வெளியிட உள்ளது. அதை வெளியிட்ட பிறகு, மத்திய தொல்லியல் துறையினரிடம் உள்ள 5,765 தொல்லியல் பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தப் பொருள்களை மாநில அரசு பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
