தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் சிறுபான்மை கிறிஸ்தவர் குடியிருப்பு பகுதிகளுக்குள் அதிகாரிகள் யாரும் எட்டிக்கூட பார்ப்பதில்லை என மக்கள் புலம்பிய வண்ணம் நாள்தோறும் நடக்கிறது. உத்தமபாளையம் ஆர்.சி.மேலக்கிணற்று தெருவில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் சுமார் 500குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாக்கடை பாலத்தில் டன் கணக்கில் குப்பைக்கழிவுகள் குவிந்து கிடப்பதால் இப்பகுதி மக்கள் நோய்த்தொற்று பயத்துடன் உள்ளனர்.
கடந்த வருடம் பேரூராட்சிதுறையினர் சாக்கடை பாலத்தில் உள்ள குப்பைக்கழிவுகளை நடவடிக்கை என்ற பெயரில் பெயரளவிற்கு மட்டும் வேலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
சிறுபான்மை கிறிஸ்தவர் என்ற காரணத்தினால் உத்தமபாளையம் பேரூராட்சி துறையினர் இப்பகுதி பக்கமே வருவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
குறிப்பாக இப்பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளதால் சாக்கடை பாலத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைக்கழிவுகளால் நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ என பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடி அழைத்துசெல்ல தயக்கம் காட்டுகின்றனர்.
மேலும், குப்பைக் கழிவுகளால் இப்பகுதி முழுக்க துர்நாற்றம் வீசுவதாக இப்பகுதி சிறுபான்மை கிறிஸ்தவர்கள் புலம்புகின்றனர்.
நோய்த்தோற்றால் உயிர்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? சிறுபான்மை ஆர்.சி.மேலக்கிணற்றுதெரு மக்கள் எதிர்பார்ப்பு...

