தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள மேலரதவீதியில் ஸ்ரீ ஐயப்பன் அன்னதான திருமண மண்டபத்தில் இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக இரண்டு நாள் புகைப்பட கண்காட்சி, மற்றும் பெண் குழந்தையைக் காப்போம் பெண் குழந்தைக்கு கற்பிப்போம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதனை தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.கமல்கிஷோர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.ராணிஸ்ரீகுமார், துணை இயக்குநர் பத்திரிகை தகவல் அலுவலகம் திருமதி.விஜயலட்சுமி, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கிவைத்தனர்.
தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விளக்க புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பெண்கள் இளம் வயதில் திருமணம் செய்வது அதிகரித்ததோடு அதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது அந்த வகையில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் பெண் குழந்தைகளுக்கு காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்தமைக்காக முதலில் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி செயல்பட்டு வந்ததாகவும் அதே போல அம்பேத்கர் பெண் குழந்தைகளுக்காகவும் பெண்களுக்காகவும் சட்டங்களை கொண்டுவந்தார் எனவும் பேசினார் ஆகவே பெண் குழந்தைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த முகாமில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றது. மேலும் இதில் கலை நிகழ்ச்சிகள், அரசு துறைகளில் சார்பில் விழிப்புணர்வு ஸ்டால்கள் மற்றும் ஆதார் திருத்தம் மேற்கொள்ளுதல், அஞ்சலகத்தின் சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் எவ்வாறு பயன்படுவது உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் இந்த முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பொறுப்பு கவிதா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி, வாசுதேவல்லூர் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன்,செயல் அலுவலர் பரமசிவன்,கள விளம்பர அலுவலர் கோபகுமார், கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசீர், கள விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாம் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது ஆகவே பொதுமக்கள் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை மண்டல சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..