பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் மூளைக்காய்ச்சல் தடுப்பூசி திட்டம், 2007ஆம் ஆண்டு முதல் 15 மாவட்டங்களிலும், சென்னையில் 2 மண்டலங்களிலும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கின்ற குழந்தைகளை அதிகம் பாதிக்கின்ற இந்நோய்க்கு மூளைக்காய்ச்சல் தடுப்பூசி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்தாண்டு பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்டது.அதன்படி சென்னையில் 13 மண்டலங்களிலும், புதிதாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தில் தமிழ்நாட்டை பொறுத்தவரை காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, எச்.இன்புளுயன்சா, நிமோனியா மற்றும் மினிஞ்சிடிஸ், ரண ஜன்னி, போலியோ, தட்டம்மை, ரூபெல்லா, ரோட்டா வைரஸ் வயிற்றுபோக்கு, நியூமோகோக்கல் நிமோனியா, மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்று பல்வேறு வகைகளிலான நோய் பாதிப்புகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன," என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்..
மேலும் பேசிய அவர், "ஜப்பானிய மூளைக்காய்ச்சல் சில வகையான கியூலெக்ஸ் கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இந்த நோய் மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுத்தி கடுமையான சிக்கல்கள் மற்றும் வலி பாதிப்புகளை உண்டாக்குகிறது. அது மட்டுமல்லாது மரணத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த நோயினால் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி ஆபத்துள்ள மாவட்டங்களில், 1 முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.5 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 12 வரை திங்கள், வியாழன், மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகபட்சமாக 12 நாட்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும். அதைத் தொடர்ந்து விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரம் தடுப்பூசிபோடப்படும்.1-5வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளியிலிருந்து இடைநிற்றலான குழந்தைகளுக்கும் தடுப்பூசி முகாம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் செப்டம்பர் 13 முதல் அக்டோபர் 12 வரை திங்கள், வியாழன், மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகபட்சமாக 12 நாட்களுக்கு நடைபெறும். அதனைத் தொடர்ந்து விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரம் தடுப்பூசி போடப்படும்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் அனைத்து ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் 1-15 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அக்டோபர் 13 முதல் நவம்பர் 12 வரை திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகபட்சமாக 12 நாட்களுக்கு முகாம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரம் தடுப்பூசி போடப்படும்.இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.முகாமில் தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இந்த தடுப்பூசி 1 முதல் 15 வயது வரையிலான 27,63,152 குழந்தைகளுக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கு சம்மந்தப்பட்டவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.
