தொடர்ந்து, மீண்டும் 10 நாட்கள் அவகாசம் அளித்து, 2-வது முறையாக அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கும் நேற்றுடன் அவகாசம் நிறவடைந்த நிலையில், அவர் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்குவதாக அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக, திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் இல்லத்தில் இன்று (செப்.11) செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “பல்வேறு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைந்த 16 குற்றச்சாட்டுகளுக்கு, இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதில் அளிக்கவில்லை. எனவே, அனைத்து குற்றச்சாட்டுகளையும் தான் செய்த தவறுகள் என்று அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்ற அனுமானம் இருப்பதால், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையானவையே, சரியானவையே என முடிவு செய்யப்படுகிறது. எனவே அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குகிறேன்.
அன்புமணியுடன் இனி கட்சி உறுப்பினர்கள் யாரும் தொடர்பில் இருக்கக் கூடாது. மீறி செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இருமுறை நோட்டீஸ் அனுப்பியும் தன் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்பதால் தான் இதுவரை அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கட்சி விதிகளின்படி நிறைய வாய்ப்புகள் அன்புமணிக்கு கொடுக்கப்பட்டன. ஆனால், அதனை அவர் முறையாக பயன்படுத்திக் கொள்ளாததால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அன்புமணி மற்றும் அவருடைய குடும்பத்தார் பாமகவின் தனிக்கட்சிபோன்றுசெயல்படுகிறார்கள். பாமகவில் இதுவரை யாரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கைகளில் அன்புமணி ஈடுபட்டார். பல்வேறு தரப்பினர் அறிவுரை கூறினாலும், அன்புமணி அதனை ஏற்கும் நிலையில் இல்லை. அரசியல்வாதி எனும் தகுதி அவருக்கு இல்லை. அன்புமணியுடன் சேர்ந்து செயல்பட்டவர்களை மீண்டும் பாமகவில் சேர்க்க தயாராக உள்ளேன்.
அன்புமணி தனிக்கட்சி தொடங்கலாம் என ஒரு வருடத்துக்கு முன்பே சொல்லி விட்டேன். ராமதாஸ் என்ற தனி மனிதர் ஆரம்பித்த கட்சி பாமக. இதற்கு உரிமை கோர எனது மகன் உட்பட யாருக்கும் உரிமையில்லை. பாமகவில் இருந்து அன்புமணி எனும் களையை நீக்கியுள்ளேன். அன்புமணியை நீக்கியதால் பாமகவிற்கு இது ஒரு பின்னடைவு அல்ல, இது ஒரு களையெடுப்பு. பாமகவின் வளர்ச்சிக்கு குந்தகமாக இருந்த அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம்.என் பெயரைஇனிஅன்புமணிபயன்படுத்தக் கூடாது.இனிஷியலைவேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். பாமகவின் வளர்ச்சி மட்டுமே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செயல் தலைவர் பதவியை யாருக்கு கொடுப்பது என பின்னர் முடிவு செய்யப்படும். ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை அடிப்படையில் கட்சி தலைமையால் எடுக்கப்பட்ட முடிவு இது” என்றார்.
