திண்டுக்கல்:விஜய்க்கு அரசியலே தெரியாது! அவர் திமுகவுக்கு போட்டியா? அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி!!!
9/15/2025
0
சீமான், விஜய் ஆகியோர் தொகுதிக்கு 20 முதல் 25 ஆயிரம் வாக்குகளை தாண்ட மாட்டார்கள் என்று அமைச்சர் ஐ.பெரியசாமிகுறிப்பிட்டுள்ளார்.தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாது, அவரை பற்றி திமுகவுக்கு கவலை இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.அண்ணாவின் 117 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி பெறும். இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் நிச்சயம் முதல்வராவார். அதை யாராலும் தடுக்க முடியாது. மக்களுக்கான எல்லா திட்டங்களையும் கொடுத்து மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்ற தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்" என்றார்.மேலும், விஜய் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜய் தற்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதிமுகவை பொருத்தவரையில் எப்படியாவது இரண்டாம் இடத்தை பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். மூன்றாவது, நான்காவது இடத்தை பெறுவதற்கு தான் தற்போது விஜய்க்கும், சீமானுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது. விஜய் இன்னும் தேர்தலை சந்திக்கவில்லை. சீமான் மூன்று தேர்தல்களை சந்தித்துள்ளார். அதனால் அவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் திமுகவுக்கு போட்டியில்லை.விஜய்க்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாது, அவரை பற்றி திமுக எப்போதும் கவலைப்பட்டது இல்லை. அவர் திமுகவை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை பற்றி எல்லாம் நாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை. மக்கள் வாக்குச் சாவடிக்கு சென்றால் திமுகவுக்கு வாக்களிப்பார்கள். அனைத்து தரப்பு வாக்குகளும் திமுகவுக்கு வரும். அதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.சீமான் மற்றும் விஜய் தொகுதிக்கு 20 முதல் 25 ஆயிரம் வாக்குகளை தாண்ட மாட்டார்கள். அதே நேரம் அதிமுக அவர்களை விட 5 ஆயிரம் வாக்குகள் அதிகம் வாங்கும். திமுக நிச்சயம் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். விஜய்யை பற்றி எங்களுக்கு எவ்வித சிந்தனையும் இல்லை. மக்கள் சினிமா பார்ப்பதை போல், விஜய்யை பார்க்கிறார்கள். இதில் ஆச்சரியப்பட வேறுஎதுவுமில்லை"என்றார்.தொடர்ந்து பேசிய அவர், "2026 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும். மற்ற கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழக்கும். முதல்வர் ஸ்டாலின் வரும் போது அதை விட அதிக கூட்டம் வரும். விஜய்யை பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது" என்றும் அவர் தெரிவித்தார்.
