கோயம்புத்தூர்: கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுத்ததாக வெளியான குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது!!!
9/12/2025
0
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்ததாக வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.கோவை அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவ மனையில் நோயாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என வீடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில், 85 வயதுடைய வடிவேல் என்பவரை, அவரது மகன் தோளில் சுமந்தபடி மேல் தளத்திலிருந்து கீழ்தளம் வரை தூக்கிச் செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து விசாரணை மேற்கோண்ட மருத்துவமனை நிர்வாகம், இந்த விவாகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்தநிறுவனத்தின்மேற்பார்வையாளகள் இருவரை 5 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும், சம்பவம் குறித்து, அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சி மூலம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து இது தொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் கோவை அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் சக்கர நாற்காலி வழங்காமல், ரூ.100 லஞ்சம் கேட்டனர்” என்ற குற்றச்சாட்டுடன் வீடியோ ஒன்று வெளியானது. ஆனால், கடந்த 9 ஆம் தேதி வடிவேல் (85) என்ற நோயாளி உறவினருடன் ஆட்டோவில் வந்து வாக்கர்உதவியுடன்மருத்துவமனைக்குள் நுழைந்தார். தொடர்ந்து JICA (ஜே.ஐ.சி.ஏ.) கட்டடத்தின் முதல் மாடியில் உள்ள ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவில் பரிசோதிக்கப்பட்டார். தொடர்ந்து பொது அறுவை சிகிச்சை பிரிவிற்கு அவரை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.அப்போது நோயாளியின் உறவினர், கீழ்தளத்தில் சக்கர நாற்காலி கேட்டார். ஆனால், அதற்கான பணியாளர் அப்போது மற்றொரு நோயாளியை சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்றிருந்ததால், சுமார் 15 நிமிட தாமதம் ஏற்பட்டது. பின்னர் சக்கர நாற்காலி வழங்கப்பட்ட போதிலும் நோயாளியின் உறவினர் அதை ஏற்க மறுத்து, அங்கு இருந்த பணியாளருடன் வாக்குவாதம் செய்தார்.இந்த நேரத்தில், நோயாளியின் உறவினர் வெளியில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை அழைத்து வந்தார். சிசிடிவி காட்சிகளில் தெளிவாக காணப்படுவது போல, நோயாளியின் கையில் இருந்த வாக்கரை பலவந்தமாக அகற்றி அதை ஆட்டோ ஓட்டுநரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, தனது மொபைல் போனை ஆட்டோ ஓட்டுநரிடம் கொடுத்து வீடியோ எடுத்து நோயாளியின் நிலையை பெரிதுபடுத்த முயன்றார்.நோயாளி நடந்து செல்ல சிரமப்பட்ட போதும், உறவினர் அவரை பலவந்தமாக இழுத்துச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனை மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. மருத்துவமனையை குற்றம் சாட்டும் நோக்கில் இச்சம்பவம் நிகழ்த்தப்பட்டதாகத்தெரிகிறது. கோவை அரசு மருத்துவமனையில் போதுமான அளவு சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்கள் உள்ளன. லஞ்சம் கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கும் எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இருப்பினும், நோயாளி சேவையில் சிரமம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அனைத்து பணியாளர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
