ஆனால் இன்று வரை அந்த தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை, அதை பற்றி உச்சநீதிமன்றம் கேட்கவில்லை. இவ்வாறு கூறிவிட்டு உச்சநீதிமன்றம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் கொடுத்து, அணையில் சோதனை செய் என்று அனுப்பி வைக்கிறது. இது ஏற்புடையது அல்ல. கேரளா மாநிலத்தில் உள்ள என்.ஜி.ஓக்கள் இனப் பாகுபாடு செய்து பல விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. அதனை உச்சநீதிமன்றம் கேள்விகேட்பதுஇல்லை”என்றார். முல்லைப் பெரியாறு அணையில் வெடிகுண்டு இருப்பதாக வந்த செய்தி குறித்து பேசுகையில், “முல்லைப் பெரியாறு அணை, அமைந்திருக்கும் பகுதி யாரும் நுழைய முடியாத புலிகள் காப்பக பகுதியில் எவ்வாறு வெடிகுண்டு எடுத்து சென்றிருப்பார்கள் என்று சிந்திக்காமல் கேரளா அரசு அணையை பற்றி அவதூறுகளை பரப்புவதற்காகவே இவ்வாறு புரளியை கிளப்பி உள்ளது. இது முழுக்க முழுக்க கேரள அரசின் சதி செயல்” எனக் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரை பருகும் 5 மாவட்டங்களில், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் யாரும் இதுவரை முல்லைப் பெரியாறு அணைக்காக நாடாளுமன்றத்தில் பேசியதாக தெரியவில்லை, எங்களை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவே செயல்படுகிறது.முல்லைப் பெரியாறு அணையில் உள்ள காவலர்களை அப்புறப்படுத்தி விட்டு அங்கு துணை ராணுவத்தை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 26 ஆம் தேதி கம்பத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கின்றனர் என்று பாலசிங்கம் பென்னிகுவிக் தெரிவித்தார்.
