இன்று பிற்பகல் ஜார்க்கண்ட் செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்ல ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டு இருந்த நிலையில் அவர்களை நீண்ட வரிசையில் நிற்க வைத்து ரயில்வே போலீசார் அனுப்பினர் வைத்தனர். மேலும் ஒலி பெருக்கி மூலம் நகைகள், உடமைகள், குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளும்படியும் ரயில்வே போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
இன்னும் ஒரு வாரம் தீபாவளி பண்டிகைக்கு இருக்கும் நிலையில் பாதுகாப்பு பணிகளை ரயில்வே போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் ஏதேனும் அனுமதி இன்றி ரயில்களில் கொண்டு செல்லப்படுகின்றதா? என்பது குறித்தும் ரயில்வே போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்.மேலும், பண்டிகை காலம் என்பதால் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களிடமும், வயதானவர்களிடமும் நகை பறிப்பு சம்பவம் நடைபெற வாய்ப்புள்ளதால் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு ரயில்வே போலீசார் அறிவுறுத்தல் கொடுத்து வருகின்றனர். மேலும் சந்தேகப்படும் வகையில் நபர்கள் தென்பட்டால் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் போலீசார் அறிவித்து வருகின்றனர்.
கூட்டம் அதிகமாக உள்ள பெட்டிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ரயிலில் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் வகையில், சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மோப்ப நாய் கொண்டு ரயில் பெட்டிகள் மற்றும் பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், ''தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தற்போது முதலே குடும்பத்துடன் ரயில் நிலையத்திற்குவந்துகொண்டிருக்கின்றனர். இவர்களை ஒழுங்குப்படுத்தி வரிசையாக ரயிலில் ஏற்றி அனுப்பி வருகிறோம்.கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவதால் பழையகுற்றவாளிகளின் புகைப்படங்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டு ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். இதை தவிர போலீசார் நடைபாதைகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் எவ்வித அச்சமும் இன்றி பயணிக்கலாம்'' என தெரிவித்தனர்.
