திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு!!!
10/29/2025
0
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் இரண்டு அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஒன்றாவது மற்றும் இரண்டாவது அணு உலைகளில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்த நிலையில் 5 மற்றும் 6-வது அணு உலைகளில் பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அதிகாரி ஒருவரின் செல்போன் எண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினார்.இது குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, கூடங்குளம் வளாகம் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் கூடங்குளம் அணுமின் நிலைய வாளகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. மேலும், வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த சில மாதங்களாகவே தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் மாளிகை, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு முடிவில் அது வெறும் புரளி என தெரிய வந்தது. அதுபோல தற்போது அணுமின் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இது குறித்து காவல் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், வெடுகுண்டு மிரட்டல் வந்த தகவலின் அடிப்படையில் உடனடியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அணு உலைகள் உள்பட அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதுவரை இது போன்று வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனவே, இது வெறும் புரளி என்பது தெரிய வந்துள்ளது. அடுத்த கட்டமாக மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். குறுஞ்செய்தி வந்த செல்போன் நம்பரை ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.
