அதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைக் கண்டு ஆத்திரமடைந்த போலீசார், அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்ய முற்பட்டனர். அப்போது நடந்த தாக்குதலில் செல்வ நாராயணன் என்பவருக்கு கையில் காயமும், பெண் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. ஆனால், அவற்றை பொருட்படுத்தாக போலீசார் ஆண், பெண் என்ற பாரபட்சமின்றி அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றினர்.இச்சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும் பெண்கள், முதியவர்கள் என அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால், தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது. இதற்கிடையே, செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், "எங்கள் ஊரில் பேருந்துகளை நிறுத்த மறுக்கின்றனர். 2 மாதங்களுக்கு முன்பு எனது பேத்தி காசை முழுங்கிய போது, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பேருந்துக்காக சுமார் இரண்டு மணி நேரம் காத்துக் கிடந்தோம். இதனால், பேருந்தை நிறுத்த வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது, ஒரு காவலர் எனது காலில் மிதித்தார். இதில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆண் பெண் என்று பார்க்காமல் அனைவரையும் அடிக்கிறார்கள்" என குற்றம் சாட்டினார்.
