நேற்று இரவு பெய்த மழை காரணமாக தீபாவளிக்கு புத்தாடைகள் மற்றும் பட்டாசு, இனிப்பு வகைகள் என வாங்க சென்ற பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதோடு சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை வரை கொட்டி தீர்த்த கனமழையால் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததோடு, வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.இதனால் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் தீபாவளி கொண்டாட முடியாத சூழ்நிலையில் உள்ளனர். குறிப்பாக ராஜூவ் நகர், கதிர்வேல் நகர், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர் போன்ற பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதோடு வீடுகளுக்குள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் பிஎன்டி காலனி போன்ற பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. ஆதிபராசக்தி நகர் பகுதியில் சாலையை விட மழை நீர் செல்லக்கூடிய கால்வாய் உயரமாக இருப்பதால், அந்த கால்வாய் வழியாக தண்ணீர் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால், மழை நீர் அப்படியே சாலை முழுவதும் குளம் போல் காட்சியளிக்கிறது.
முன்னதாக, வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்தால் அடுத்த 7 தினங்களில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இன்று முதல் 22 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 23 முதல் 25 ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழைக்கான வாய்ப்பும், 20 முதல் 25 ஆம் தேதி வரை வட கடலோர மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
