சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு பலத்த சோதனைகளுக்கு பின்பே பயணிகளுக்கு அனுமதி!!!
11/11/2025
0
அதிரடி படை வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் உதவியுடன் சென்னை விமான நிலையம் முழுவதும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு சோதனை செய்து வருகின்றனர்.டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.டெல்லியில் நேற்று மாலை செங்கோட்டை மெட்ரோ அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில்தீவிரசிகிச்சைபெற்றுவருகின்றனர். இதையடுத்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை மாநகர் முழுவதும் முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையம், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.அதிலும் குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக இருக்கும் மூன்றடுக்கு பாதுகாப்பு, ஐந்து அடுக்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வாகனங்கள், உடைமைகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே விமான நிலையத்திற்கு உள்ளே அனுமதித்து வருகின்றனர்.மேலும் சென்னை விமான நிலைய பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அதிரடி படை வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சென்னை விமான நிலையம் முழுவதும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு சோதனை செய்து வருகின்றனர்.பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் லக்கேஜில், கத்திரிக்கோல், ரேஷர் பிளேடு, பின்னல் ஊசிகள், கயிறு, இன்சுலேசன் டேப், வாக்கிங் ஸ்டிக், கோடாரி போன்ற கூர்மையான ஆயுதங்கள், ஊறுகாய் பாட்டில் உள்ளிட்டவைகள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானங்களில் பார்சல்கள் ஏற்றும் மற்றும் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று மதியம் சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதிகள் விமான நிலையத்திற்குள் ஊடுருவினால் அதை எவ்வாறு தடுத்து முறியடிப்பது? அவர்களை எவ்வாறு சமாளிப்பது? என்பது குறித்து ஒத்திகை நிகழ்வை நடத்தினர். அதில் விமான நிலையத்தில் பயணிகள் நடமாட்டம் இருக்கும் போது தீவிரவாதிகள் ஊடுருவினால் அவர்களை எப்படி சுட்டு வீழ்த்தி பிடிப்பது? என்பது குறித்து தத்ரூபமாக ஒத்திகையை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் செய்து காட்டினர். இதனால், விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
