வேலூர்:காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் 13வது முறையாக களமிறங்கும் துரைமுருகன்!!!
3/29/2026
0
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் அது துரைமுருகனின் கோட்டை என்றே சொல்லலாம். நீண்ட ஆண்டுகளாக அந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார் துரைமுருகன். காட்பாடியில், 8வது முறையாக துரைமுருகன் எம்.எல்.ஏவாக உள்ளார். மொத்தமாக 10 முறை எம்.எல்.ஏவாக வென்றுள்ளார்.1971 ஆம் ஆண்டில் முதல் முறையாக காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் துரைமுருகன். 1977 மற்றும் 1980 தேர்தல்களில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984 மற்றும் 1991 தவிர மற்ற எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் துரைமுருகன். கடந்த 1996 முதல் தொடர்ச்சியாக 6 முறை காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.வயது முதிர்வு காரணமாக, அவருக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், சீட் மறுக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், காட்பாடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட நான்கு பேரிடம் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 20 ஆம் தேதி நேர்காணல் நடத்தினார். துரைமுருகன் திமுகவில் மொத்தமாக இதுவரை 10 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.வரும் தேர்தலில் சீனியர்கள் பலருக்கும் சீட் கிடைக்காது என கூறப்படுவதால் தமிழ்நாடு நீர்ப்பாசன துறை மந்திரி துரைமுருகனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. 2021 ஆம் ஆண்டு வெற்றி பெற்று மந்திரியாக பொறுப்பேற்றதிலிருந்து துரைமுருகனுக்கு பலமுறை உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அந்த தொகுதியில் ஒரு இளைஞரை நிறுத்த திமுக தலைமை முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் தான் இன்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட திமுக வேட்பாளர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார் துரைமுருகன். காட்பாடி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார் துரைமுருகன். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் துரைமுருகன் வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
